பெங்களூரு: கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, ரூ.439.7 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் அவர் மீதுமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி பெலகாவியில் சவுபாக்யா சர்க்கரை ஆலை நடத்தி வருகிறார். இதன் வளர்ச்சிக்காக கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம்ஆண்டு வரை கர்நாடகா கூட்டுறவு வங்கியில் ரூ.232.88 கோடி கடனாக பெற்றார்.
ஆனால் வட்டி, அசல் மற்றும் அபராதம் ஆகியவற்றை முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து, அசல், வட்டி, அபராதம் என மொத்த நிலுவைரூ.439.7 கோடியாக உள்ளது. கூட்டுறவு வங்கி பல முறை வலியுறுத்தியும் கடனை செலுத்தவில்லை.
தாய், மனைவி மீதும்… இதனால் வங்கி நிர்வாகம் பெலகாவியில் உள்ள விஸ்வேஸ்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதன்பேரின் ரமேஷ் ஜார்கிஹோளி, அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் மீது போலீஸார் இந்திய குற்ற வியல் தண்டனை சட்டம் 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.