உலகளாவிய நகரமாக உருவான அயோத்தி..!! தினமும் 3 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்ப்பு

புதுடெல்லி,

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இவ்விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 25,000 இந்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக 10,000 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் வரும் ஆண்டுகளில், அயோத்திக்கு தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வாடிகன் நகரம், கம்போடியா, ஜெருசலேம் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள திருப்பதி போன்ற இடங்கள் இதுபோன்ற உதாரணங்களை ஆய்வு செய்த பிறகே கோவில் நகரத்திற்கான திட்டமிடல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்த திட்டத்தின் மாஸ்டர் பிளானர் திக்சு குக்ரேஜா கூறுகையில், “விருந்தோம்பல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் குறிப்பிடத்தக்க தேவையுடன் அயோத்தி நகரம் பன்மடங்கு வளரக்கூடும் என்பதால், ஆன்மீக, கலாச்சார, பாரம்பரிய சொத்துக்கள் மற்றும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு அயோத்தி ஒரு உலகளாவிய சுற்றுலாத் தலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நகரம் சுற்றுலா, பொருளாதாரம் மற்றும் மத நடவடிக்கைகளுக்கான ஒரு மெகா மையமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று-நான்கு ஆண்டுகளில் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் சுற்றுலாவின் தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், சாலைகள், பாலங்கள், கழிவுநீர் அமைப்புகள் மற்றும் பயன்பாடுகள் போன்ற நவீன உள்கட்டமைப்பை நாங்கள் வடிவமைத்தோம், அதே நேரத்தில் இந்த வளர்ச்சிகள் நகரத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார தன்மையை சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதிசெய்தோம். திறமையான நிலப் பயன்பாட்டை ஊக்குவிக்கும், நெரிசலைக் குறைக்கும் மற்றும் குடியிருப்பாளர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நகரத்திற்கான தளவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பரந்த நில பயன்பாடும், குறைவான நெரிசலும் இருக்கும்வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். தர்மசாலாக்கள், தங்குமிடங்கள் மீது கவனம் செலுத்தப்படும். இங்கு நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். வெளியில் இருந்து வருபவர்கள், குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அயோத்திக்குள் பயணிப்பதற்கு மின்சார வாகனங்களை பயன்படுத்தும்வகையில் ஏற்பாடு செய்யப்படும். இந்த திட்டங்கள், வேலைவாய்ப்புக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.” என்று அவர் கூறினார்.

முன்னதாக டெல்லியில் ஏரோசிட்டி மற்றும் துவாரகாவில் உள்ள “யஷோபூமி” – இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர் (ஐஐசிசி) ஆகியவற்றை வடிவமைத்த குக்ரேஜா, தனது குழு உலகெங்கிலும் உள்ள கோவில் நகரங்களை ஆய்வு செய்து, அதற்கான தேவைகளைப் புரிந்துகொண்டு அயோத்திக்கான வரைபடத்தை வரைந்ததாக விளக்கினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.