நீண்ட காலமாக போக்குவரத்து தொழிலாளர்கள் முன்வைத்து வரும் 6 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற முடியாது எனக் கூறிவிட்டதால், நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பை வெளியிட்டனர். அதனால், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பொங்கல் பண்டிகைச் சூழல் என்பதால் இவற்றை சமாளிப்பதற்காக தி.மு.க-வின் தொ.மு.ச, காங்கிரஸின் ஐ.என்.டி.யு.சி தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களை வைத்து பெரும்பாலான அரசுப் பேருந்துகளை இயக்கி வருகிறது அரசு. அதேசமயம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பேருந்து போக்குவரத்து சிறிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தற்காலிக ஓட்டுநர்களின் அனுபவமின்மையால், சில விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று காலை விசாரித்த நீதிமன்றம், ”போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்றுதான் கூறுகிறோம். பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா… இந்த போராட்டத்தால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்த வேண்டும்… நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்… இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்னை?” எனக் கேள்வி எழுப்பியது.
அதைத் தொடர்ந்து, வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், ஜனவரி 19-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து பணிக்குத் திரும்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பணிக்குத் திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்களை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பணிக்குத் திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையில் இரண்டு கோரிக்கைகள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அடுத்த இரண்டு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பொங்களுக்குப் பிறகு நிறைவேற்றுவதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்தே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொங்கள் முடிந்து 19-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரங்களையும் பார்த்தப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியிருக்கிறார்கள். பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் நோக்கம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.