சேலம் தி.மு.க அவைத் தலைவராக இருந்து வருபவர் ஜி.கே.சுபா.ஷ் இவர், அண்மையில் ஓர் ஆடியோ பதிவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதில், “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, சேலம் மாவட்டத்தில் அமோக வெற்றி பெறும் என்ற கனவை, இங்குள்ள இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழித்தோண்டி புதைக்கும் வேலையைச் செய்து கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்டத்தில் பதவிக்கு வந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.

இதனை தி.மு.க-காரனாக நான் சொல்லவில்லை. அ.தி.மு.க-வில் இருப்பவர்களே அப்படித்தான் சொல்கின்றனர். மேற்படி இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், எடப்பாடி உடன் பேசி வைத்துக்கொண்டு ஆட்சி செய்து வருகின்றனர். மாநகராட்சி ஆணையராக இருந்து வரும் பாலச்சந்திரன்,
மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாலும், ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து விட்டுத்தான் எந்தவித நடவடிக்கையும் எடுத்து வருகிறாராம். இதனை நான் சொல்லவில்லை. அ.தி.மு.க கவுன்சிலர்கள், தி.மு.க விசுவாசிகள் என்னிடம் வந்து கூறுகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து தி.மு.க அவைத் தலைவர் ஜி.கே.சுபாஷிடம் பேசினோம், “நீங்கள் கேட்ட ஆடியோ என்னுடையதுதான். நான்தான் சமூக வலைதளங்களில் வெளியிட்டேன். பலமுறை சேலம் பொறுப்பு அமைச்சர் கே. என்.நேருவைச் சந்தித்தும், இது குறித்து கூறிவிட்டேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது இல்லை. நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நேரத்தில், வரி வசூலிப்பு என்கிற பேரில், பல அக்கப்போரை செய்து வருகிறார் மாநகராட்சி ஆணையர். இதனை தலைமை கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால்… மக்களிடம் தவறான எண்ணங்கள் கட்சியின்மீது உருவாகிவிடும்” என்றார்.

இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரனிடம் பேசினோம். “அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் அதிகாரிகளாக நாங்கள் செய்ய முடியும். மற்றவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்துகொடுக்க வேண்டுமென்றால், அது எங்களுடைய வரைமுறைக்குட்பட்டு இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். ஜி.கே.சுபாஷுக்கும் மாநகராட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால் எதற்கு யார் தூண்டிவிட்டு, இப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை” என்றார்.