நேபாளத்தில் புத்தரின் மறு பிறவி என நம்பவைக்கப்பட்ட 33 வயது நபர், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கைதுசெய்யப்பட்டவரின் ஆசிரமத்திலிருந்து சிலர் காணாமல்போனதாகவும், சிலர் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாகவும் எழுந்த குற்றச்சாட்டின்பேரில், போலீஸார் இத்தகைய நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கைதுசெய்யப்பட்டவரின் பெயர் ராம் பகதூர் போம்ஜன்.

தண்ணீர், உணவு, தூக்கம் இல்லாமல் இவரால் பல மாதங்கள் அசையாமல் தியானம் செய்ய முடியும் என இவரைப் பின்தொடர்பவர்கள் கிளப்பிவிட்ட கதைகளால், மக்களிடையே பிரபலமடைந்தார். மேலும் இவர் பொதுவாக, `Buddha Boy’ என்று அவரைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் அறியப்படுகிறார். இவ்வாறிருக்க, இவரைப் பின்பற்றுபவர்கள் உடல்ரீதியாகவும், பாலியல்ரீதியாகவும் துன்புறுத்தலுக்குள்ளாவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன.
2010-ல் போம்ஜான் மீது டஜன் கணக்கான தாக்குதல் புகார்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 18 வயது கன்னியாஸ்திரி ஒருவர், சர்லாஹியிலுள்ள ஆசிரமத்தில் குரு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018-ல் குற்றம்சாட்டினார். அதேபோல், நான்கு பேர் ஆசிரமத்திலிருந்து காணாமல்போய்விட்டதாக, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் போலீஸில் புகாரளித்திருக்கின்றனர். இது மாதிரியான குற்றச்சாட்டுகள் எழுந்த நாள்முதல், பல ஆண்டுகளாக அதிகாரிகளிடமிருந்து அவர் தலைமறைவாக இருந்திருக்கிறார்.

இந்த நிலையில், 2018-ல் சிறுமி அளித்த புகாரில் கைதுசெய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில், காத்மாண்டுவில், 30 மில்லியன் நேபாளி ரூபாய் மற்றும் 22,500 டாலர் பண மூட்டைகளுடன் ராம் பகதூர் போம்ஜனை போலீஸார் நேற்று முன்தினம் கைதுசெய்திருக்கின்றனர். இது குறித்து, போலீஸ் செய்தித் தொடர்பாளர் குபேர் கடயத், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைதுசெய்யப்பட்டார் என நேற்று தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக செய்தியர்களிடம் நேற்று பேசிய மத்திய புலனாய்வு பணியக அதிகாரி தினேஷ் ஆச்சார்யா, “காணாமல்போன நன்கு பேர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதனால், காணாமல்போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூற முடியாது” என்று கூறினார். தற்போது, சர்லாஹி மாவட்ட நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துவதற்கான வேலைகள் நடந்துவருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.