3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி சார்பில் 6 கார்கள் பரிசு! 

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறந்த காளைகளுக்கு தலா ஒரு கார், சிறந்த வீரர்களுக்கு தலா ஒரு கார் என மொத்தம் 6 கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் முன்னேற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் இன்று நடந்தது.கூட்டத்துக்குப் பின் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ஜனவரி 15-ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, 16-ல் பாலமேடு ஜல்லிக்கட்டு, 17-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்குத் தொடங்கி, வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு நிறைவு பெற்றது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இரட்டைப் பதிவு, சரியான ஆவணங்கள் இல்லையெனில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் தேர்வாகும் சிறந்த காளைக்கு தலா ஒரு கார், அமைச்சர் உதயநிதி சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும். மூன்று ஜல்லிக்கட்டிலும் 6 கார்கள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், சோழவந்தான் எம்எல்ஏ ஆ.வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய அரங்கில் 5 நாட்கள் போட்டி: அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் இம்மாத இறுதிக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்துவைக்க உள்ளார். தொடக்க விழா நடைபெறும் நாள் முதல் தொடர்ந்து 5 நாட்கள் இந்த பிரம்மாண்ட அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அரசு சார்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஒரு நாளாவது மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும். இதுபோல் ஆண்டுதோறும் இந்த அரங்கில் போட்டி நடத்தப்பட உள்ளது.

2,475 காளைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: 15-ம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 2,400 காளைகளும், 1318 மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். அதுபோல், 16-ம் தேதி நடக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 3,677 காளைகளும், 1,412 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். 17-ம் தேதி நடக்கும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 6,099 காளைகளும், 1784 வீரர்ளும் முன்பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து 12,176 காகைளும், 4,514 வீரர்களும் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.கடந்த ஆண்டு 9, 701 காளைகளும், 5,399 வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு, காளைகளை அடக்கும் வீரர்கள் எண்ணிக்கை முன்பதிவு குறைந்தாலும் 2,475 காளைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.