“உலக முதலீட்டாளர் மாநாட்டில் தென் மாவட்ட மக்கள் வஞ்சிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, கைவிடப்பட்டிருக்கிறார்கள்…” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மிகப் பெரிய அளவில் மதுரையும், சுற்றியுள்ள மாவட்டங்களும் வஞ்சிக்கப்பட்டிருப்பதைப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்து வேதனை அளிக்கிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ 6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலமாக 15 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 13 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தி.மு.க அரசு அறிவித்திருக்கிறது.

இதில் பெரும்பாலான முதலீடுகள் வட மாவட்டங்களுக்கான அறிவிப்புகளாகவே உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தபடி, தமிழகத்தின் சமச்சீர் தொழிற் வளர்ச்சி என்ற கோட்பாடு முழுமையாக விட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தென் மாவட்ட மக்கள் இப்போதும் வஞ்சிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, கைவிடப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக, மதுரை மட்டும்தான் எந்தவிதமான இயற்கைச் சீற்றங்களுக்கும் ஆட்படாமல் தொழில் செய்வதற்கு உகந்த மாவட்டமாக இருக்கிறது. அப்படி இருந்தும்கூட தொழில் வளர்ச்சிக்கான எந்தவிதமான முயற்சியையும் இந்த அரசு எடுக்கவில்லை.

இப்போது தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் போடுவதற்குகூட மதுரையை முன்னிலைப்படுத்தவில்லை. தென் மாவட்டங்களை முன்னிலைப்படுத்தவில்லை. தென் மாவட்ட மக்கள் இங்கே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை, பொருளாதார முன்னேற்றமில்லை, அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வருவதற்கான எந்த முயற்சியும் இல்லை.
தற்போது மதுரை வளர்ச்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. இந்த அரசு அதற்கான முன்னுரிமை அளிக்காவிட்டால் மதுரை மக்கள் மட்டுமல்ல, தென் மாவட்ட மக்கள் அனைவரும் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்” என்று எச்சரித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!