1 லி. பாட்டில் குடிநீரில் 2.40 லட்சம் நேனோ பிளாஸ்டிக் துகள்கள்: அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் என்பது நாம் ஓரளவுக்கு அறிந்ததே. ஆனால், அதன் அளவு என்ன என்பதுதான் சமீபத்திய அமெரிக்க அறிவியல் ஆய்வில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவலாகும். அதாவது, ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரில் சுமார் 2,40,000 நேனோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கின்றன என்பதுதான் அந்த எச்சரிக்கை தரும் ஆய்வுத் தகவலாகும்.

பேக்கேஜ் தண்ணீரை விற்கும் நிறுவனங்கள் தாங்கள் எடுக்கும் தண்ணீர் மிகவும் சுத்தபத்தமான இடங்களிலிருந்து எடுக்கப்படுவதாக விளம்பரம் செய்கின்றன. ஆனால், அதில் கண்களுக்கு புலப்படாத நேனோ பிளாஸ்டிக் துகள்கள் லட்சக்கணக்கில் மிதக்கின்றன என்பதுதான் இப்போதைய ஆய்வு நம்மை எச்சரிக்கும் ஒரு தகவல்.

அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த முக்கியமான ஆய்வை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் ‘Proceedings of the National Academy of Sciences’ என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. அதாவது நுண்ணிய பிளாஸ்டிக் துகள் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் சுமார் 1 லட்சம் முதல் 4 லட்சம் துணுக்குகள் வரை உள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். சராசரியாக 2,40,000 பிளாஸ்டிக் துகள்கள் நீரில் இருப்பதாகக் கண்டுப்பிடித்துள்ளனர்.

புதிதான லேசர் தொழில்நுட்பத்தைக் கொண்டு, அதாவது நுண்ணிதின் நுண்ணிய துகள்களையும் கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் கண்டெய்னர் தண்ணீரில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்களின் அளவுகளைக் கண்டறிந்துள்ளனர். இந்த பிளாஸ்டிக் துகள்கள் பெரும்பகுதி பாட்டிலிலிருந்தே வருவதுதான் என்கிறது இந்த ஆய்வு.

அசோசியேட் பிரஸ் செய்திகளின்படி, பாட்டில் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் போது அசுத்தங்களைத் தடுக்கப் பயன்படும் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் வடிகட்டி மூலம் மீதி துகள்கள் தண்ணீரில் வந்தடைகின்றன.

இந்த ஆய்வுக்காக ஒரு மூன்று பிராண்ட் தண்ணீர் பாட்டில்களை சோதனைக்குட்படுத்தினர். ஆனால் அந்த 3 பிராண்ட் என்னவென்பதை அவர்கள் வெளியிடவில்லை. ஏனெனில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் என்பதிலேயே பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் எனும்போது இந்த நிறுவனங்களின் பிராண்ட் என்று தனிமைப்படுத்த விரும்பவில்லை என்கின்றனர். ஆனால், இந்த பிராண்ட்கள் மிகவும் பிரபலமாக அமெரிக்காவில் புழங்கி வருபவை வால்மார்ட்டில் கிடைப்பவைதான் என்கின்றனர் ஆய்வாளர்கள். பெட் பாட்டில்கள் என்று சுருக்கமாக அழைக்கப்படுவதன் விரிவு Polyethylene terephthalate என்பதுதான்.

இதன் மனித ஆரோக்கியம் தொடர்பான தாக்கங்கள் இன்னும் முழுவதும் ஆய்வு செய்யப்படவில்லை என்றாலும் ஆய்வாளர்கள் கூறுவதென்னவெனில் ‘இவை திசுக்களில் நுழையும் தன்மை கொண்டது. செல்களில் இதன் தாக்கம் என்னவென்பதை தற்போது ஆய்வு செய்து வருகிறோம்” என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ரட்ஜர்ஸ் பல்கலைக் கழக நச்சு இயல் ஆய்வாளர் பீபே ஸ்டேப்பிள்டன் கூறியுள்ளார்.

மேலும், நேனோ துகள்கள் என்பதால் இது ரத்தத்தில் கலந்தால் ஏற்படும் நோய்க்கூறுகள் பற்றியும் ஆய்வுகள் தேவைப்படுகிறது என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் ஈடுபட்ட 4 ஆய்வாளர்களும் தாங்கள் இந்த ஆய்வுக்குப் பிறகு பாட்டில் அடைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.