பஞ்சாப் மாநிலம், குருகிராமில் இருக்கும் ஒரு ஹோட்டல் அறையில் மாடல் அழகி திவ்யா பகுஜா (27) என்பவர், கொலைசெய்யப்பட்டதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டது. விசாரணை முடிவில், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக அபிஜீத் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரைக் கைதுசெய்தது. மற்றொரு குற்றம்சாட்டப்பட்டவரான ரவி பங்கா தலைமறைவாக இருக்கிறார்.

இந்த நிலையில், வழக்கு தொடர்பான குற்றப் பின்னணியை விவரித்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், “தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக்கொண்ட மாடல் அழகி திவ்யா பகுஜாவுக்கும், சிட்டி பாயின்ட் ஹோட்டலின் உரிமையாளர் அபிஜீத் சிங்குக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளத் தொடங்கியதாகத் தெரிகிறது. இதற்கிடையில், மாடல் அழகி திவ்யா பகுஜா, அபிஜீத் சிங்குடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக பதிவுசெய்து, அதை வைத்து ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங்கை மிரட்டத் தொடங்கியிருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட விரோதத்தால் அபிஜீத் சிங், மாடல் அழகி திவ்யா பகுஜாவை ஜனவரி 2 அன்று கொலைசெய்ததாகத் தெரியவருகிறது. அதைத் தொடர்ந்து, மாடல் அழகி திவ்யா பகுஜாவின் உடலை அப்புறப்படுத்த, அவரது நண்பர்களான, ரவி பங்கா ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில், ஆகியோரை உதவிக்கு அழைத்திருக்கிறார். அவருக்கு உதவும் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பால்ராஜ் கில் அளித்த வாக்குமூலத்தில், `அபிஜீத் சிங், மாடல் அழகி திவ்யா பகுஜாவின் உடலை பஞ்சாப்பின் பாட்டியாலாவில் உள்ள கால்வாயில் வீசினார்’ எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, பாட்டியாலா கால்வாயில் மாடல் அழகியின் உடலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கொலைசெய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், உடலை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தலைமறைவாக இருக்கும் ரவி பங்காவையும் தேடிவருகிறோம்” எனத் தெரிவித்தனர்.