சிருஷ்டிக்கு திருஷ்டி : பொங்கல் பேட்டி

புத்தம் புது காலை… பொன்னிற வேளை… என்ற ஒரே ரீமேக் பாடல் மூலம் தமிழக ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் சிருஷ்டி டாங்கே. காதலாகி படத்தில் அறிமுகமாகி, யுத்தம் செய், டார்லிங் என பல படங்களில் நடித்தாலும் கூட அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்த படம் புத்தம் புது காலை பாடல் இடம் பெற்ற 'மேகா' படம் தான். எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, தர்மதுரை, வருச நாடு, கட்டில், சந்திரமுகி 2 படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளார்.

தினமலர் பொங்கல் மலருக்காக இவருடன் பேசியதிலிருந்து…

சொந்த ஊர் புனே. அங்கு படிப்பை முடித்தேன். ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டியிருந்தாலும் ஒளிப்பதிவாளர் ரவிசங்கரன் மூலம் மேகா படத்தில் நாயகி வாய்ப்பு கிட்டியது. பழைய பாடல்களை ரீமேக் செய்து வெளியான காலகட்டம் அது. மேகா படத்தில் இடம் பெற்ற 'புத்தம் புது காலை, பொன்னிற வேளை…' பாடல் இந்தளவுக்கு ஹிட் ஆகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. வாழ்நாள் முழுவதும் அது எனக்கு அடையாளத்தை தந்து கொண்டிருக்கிறது.

முதல் முறையாக கேமிரா முன் நின்றதை வாழ்வின் முக்கிய தருணமாக உணருகிறேன். அனைவருக்கும் பிடித்த நடிகையாக உயர வேண்டும் என்ற எண்ணம் அப்போது ஏற்பட்டது. ஒவ்வொரு படத்துக்கும் பெரிய இடைவெளி எடுத்து கொள்வது உண்மை தான். நல்ல கதாபாத்திரங்களுக்காக சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. எண்ணிக்கை அதிகம் இருப்பதை காட்டிலும் தரமான படங்களாக இருக்க வேண்டும் என்பதில் உஷாராக
இருக்கிறேன்.

நடிப்பை பொறுத்த வரையில் மக்கள் பாராட்டும் வகையில் இருந்தால் போதும். பெரிய ஹீரோக்களுக்கு
ஜோடியாக நடிப்பது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடிப்பதும் மிக முக்கியம். சமீபத்தில் வெளியான கட்டில் படம் வரவேற்பை பெற்றுள்ளது சந்தோஷமளிக்கிறது. அந்த படத்தில் கர்ப்பிணியாக நடிக்க முதலில் தயக்கம் இருந்தது. படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கதை சொன்ன விதம் பிடித்திருந்தது.

இந்த படத்தை பார்த்து அப்பா என்னை போனில் அழைத்து வாழ்த்தியதை மறக்க முடியாது. இப்படத்தில் நடிக்கும் போது தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்து தெரிந்து கொண்டேன். இப்போது தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். தற்போது தமிழையும் கற்க துவங்கியுள்ளேன். அடுத்த படத்தில் சொந்த குரலில் தமிழில் பேசி நடிப்பேன்.
அந்தளவுக்கு தமிழ் இனிமையான மொழி. பொங்கல் பண்டிகையை தமிழக தோழிகளுடன் இணைந்து கொண்டாடுவது உண்டு.

பிடித்த நடிகை நயன்தாரா. நடிகர் தனுஷ். நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் உண்டு. நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பாருங்கள். தலைவர்களாக பார்க்காதீர்கள் என ரசிகர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என கன்னக்குழி பெரிதாகுமளவு சிரித்து கொண்டே பேட்டியை முடித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.