Captain Miller: `வல்லிபுரம் வசந்தன் என்கிற மில்லர்' பட டைட்டிலுக்கு பின்னணியில் இருக்கும் நபர் யார்?

சமீபத்தில் தனுஷ் நடித்து, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான படம் கேப்டன் மில்லர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே, பெயர் குறித்தான விவாதங்கள் இணையத்தில் நடந்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அதற்கு விளக்கமும் தந்துள்ளார். கேப்டன் மில்லர் கதை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின், முதல் கரும்புலியான மில்லர் என்ற வல்லிபுரம் வசந்தன் என்பவரின் கதையைத் தான் எடுப்பதாக இருப்பது பிறகு சில காரணங்களால் அதைச் செய்ய முடியவில்லை” எனச் சொல்லியிருக்கிறார். சரி நிஜமான அந்த கேப்டன் மில்லரின் கதை என்ன ?

கேப்டன் மில்லர் | தனுஷ்

யார் இந்த கேப்டன் மில்லர்?

1966 சனவரி 1ம் நாள் பிறந்தவர் வல்லிபுரம் வசந்தன். ஈழத்தமிழரான இவர்‌ யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஹார்ட்லி கல்லூரியில் அவர் பயின்று வந்த காலம், ஈழத்தில் இனப் பதற்றம் வெடித்த காலம். சிங்கள அரசு தமிழர்களின் அடிப்படைகளை உரிமைகளை மறுத்தும், தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறைகளையும் நிகழ்த்திக் கொண்டிருந்த காலம் அது. இந்த காலகட்டத்தில் வளர்ந்த வசந்தன், இந்த நிகழ்வுகளைக் கண்டு மனமுடைந்து போகிறார். ”இந்த கொலைகளால் அவன் மனமுடைந்து போயிருந்தான்” என்கிறார் அவரது தாயார் கமலாதேவி. 

1983 ஜுலை மாதம், ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒரு கறுப்பு மாதம். இலங்கைத் தலைநகர் கொழும்புவில், தமிழர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, நாட்டின் பிற இடங்களுக்கும் கலவரம் பரவியது. சிங்கள வன்முறையாளர்கள் தமிழர்களைத் தாக்கியும், உயிரோடு எரித்தும், உடைமைகளை சேதப்படுத்தியும், படுகொலை செய்தனர். அந்த கலவரத்தில் ஏறத்தாழ 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாயினர். இவற்றையெல்லாம் கண்டு ஆத்திரமுற்ற வசந்தன் இயக்கத்தில் கரும்புலியாக (தற்கொலைப் படையில்) இணைகிறார். இயக்கத்தில் அவர் மில்லர் என்று அழைக்கப்படுகிறார்.

சிங்கள இராணுவம் வடமராட்சிப் பகுதியை புலிகளிடம் இருந்து கைப்பற்றியது. அதை மீட்க வேண்டுமென மில்லர் உறுதியாய் இருந்தார். தலைமையின் அனுமதிக்காகக் காத்திருந்தார். அனுமதி கிடைத்தது. 1987 ஜுலை 5, மில்லர் தனது சகாக்களுடன், இரண்டு வண்டி வெடிமருந்துகளுடன், நெல்லியடியில் உள்ள சிங்கள இராணுவத்தின் ஆயுதக் கிடங்கிற்குள் இரவோடு இரவாக நுழைந்தார். நிலம் அதிர ஒரு பெருஞ்சத்தம் கேட்டது. சிங்கள இராணுவம் நிலைக் கொண்டிருந்த இடம் தரைமட்டமானது. நாற்பதுக்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இறந்துபோனார்கள். கூடவே, மில்லரும் இறந்து போகிறார்.

வல்லிபுரம் வசந்தன்.

“அன்று இரவு நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம். ஒரு பெருஞ்சத்தம் எங்களை எழுப்பிவிட்டது” என்கிறார் மில்லரின் தாயார். அன்று தான் வல்லிபுரம் வசந்தன், கேப்டன் மில்லராக உருவெடுக்கிறார். மில்லர் இறந்த நாள் (ஜுலை,5), கரும்புலிகள் நாளாக, புலிகளால் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வல்லிபுரம் வசந்தன் தான் படத்தின் டைட்டிலுக்குப் பின்னாடி இருக்கும் நபர்.

ஈழம் தொடர்பான ஒரு கதையை படமாக எடுத்தால், அது சர்ச்சையைக் கிளப்பும் என்பதால், அதை தவிர்க்கவே கதையை இந்த நிலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்திருப்பதாக அந்த நேர்காணலில் இயக்குநர் கூறியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.