பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோவின் வீட்டில் பணி செய்துவந்த பட்டியலின இளம்பெண்ணை, பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியின் 18 வயதான மகள், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஏஜெண்ட் ஒருவர் மூலமாக சென்னை திருவான்மியூரில் உள்ள, பல்லாவரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ இ.கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் வீட்டுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார். அங்கு அந்த இளம்பெண், தான் பல்வேறு கொடுமைகளைச் சந்தித்ததாகப் புகார் அளித்திருக்கிறார்.

அது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் பேசினோம். “வேலைக்குச் சேர்ந்த முதல்ல ஒரு ரெண்டு நாள் என்ன நல்லா பாத்துக்கிட்டாங்க. ஆனா எனக்கு இதுக்கு முன்ன வீட்டு வேலை செஞ்சு பழக்கமில்லாததால, அம்மாவுக்கு போன் பண்ணி என்னால இங்க வேலை செய்ய முடியலைன்னு சொன்னேன். அம்மாவும் என்னைக் கிளம்பி வரச் சொல்லிட்டாங்க. ஆனா, மர்லினா மேடம் (எம்.எல்.ஏ-வின் மருமகள்) ‘நீ வந்து தங்கிட்டு போக இது என்ன சத்திரமா… ஆறு மாசம் உன்னை அக்ரிமென்ட்ல கூட்டிட்டு வந்திருக்கோம்’ன்னு திட்டினாங்க. திரும்பவும் அம்மாகிட்ட பேச விடாம செய்யுறதுக்கு, என் போனை பிடுங்கி வெச்சிட்டாங்க. ஆனா, எனக்கு அங்க வேலை செய்ய பிடிக்காததால, மறுபடியும் என்னைப் போகவிடுங்கன்னு கேட்டேன். அதுக்கு, ‘நான் யாரு தெரியுமா… எம்.எல்.ஏ மருமக. நான் நினைச்சா ஒரே ஒரு போன் கால்ல, உன் அம்மாவை உள்ளே தூக்கி வெச்சிடுவேன்னு சொன்னாங்க. எனக்கு பயமா இருந்ததால தொடர்ந்து அங்க வேலை செஞ்சேன்.

முதல்ல மாப் போடுற வேலைன்னுதான் சொல்லி கூட்டிட்டு வந்தாங்க. ஆனா, மூணு வேளையும் சமைக்க வெச்சாங்க. அவங்க மிச்சம் வச்ச சாப்பாட்டை சாப்பிடக் கொடுத்தாங்க. கொஞ்ச நாள் கழிச்சு ரேஷன் அரிசி ஒரு மூட்டை வாங்கிக் கொடுத்து எனக்குத் தனியா சமைச்சுக்க சொன்னாங்க. அதுலயும் ரெண்டு நாளைக்கு ஒருதடவைதான் வடிக்கணும். `காஸ் என்ன உங்க அப்பனா குடுக்குறான்’னு திட்டுவாங்க. குக்கரை யூஸ் பண்ணா… `நீயே இல்லாதப்பட்ட நாயி… உனக்கு எங்க அம்மா சீதனமா கொடுத்த குக்கர் கேக்குதான்’னு தோசைக் கரண்டியாலே அடிப்பாங்க. இப்படி எடுத்ததுக்கெல்லாம் அடியும் மிதியும்தான். ஒருதடவை மும்பைக்கு போக லக்கேஜ் பேக் பண்ணச் சொன்னாங்க.
அவங்க யூஸ் பண்ணிட்டு இருந்த ஹேர் ஸ்ட்ரெய்ட்னரையும் பேக் பண்ணச் சொன்னாங்க. அது சூடா இருக்குன்னு சொன்னேன். அதைக் கேட்டுட்டு, என்னை பக்கத்துல கூப்பிட்ட மர்லினா மேடம், இதுவா சூடா இருக்குன்னு ஹேர் ஸ்ட்ரெய்ட்னரை அப்படியே என் உள்ளங்கையில் வெச்சு அழுத்தினாங்க. அதில என் கை தோல் உரிஞ்சி கொப்பளமாகிடுச்சு. வீட்ல எல்லார்கிட்டயும் தோசைக்கல்ல சுட்டுக்கிட்டான்னு பொய் சொல்லி சமாளிச்சுட்டாங்க. இப்படி கடந்த ஆறேழு மாசமா அவங்களால நான் தினம் தினம் அனுபவிச்ச கொடுமை, கொஞ்ச நஞ்சம் இல்ல சார்…” என்று சொல்லும்போதே உடைந்து அழுதார்.
இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி-யிடம் இளம்பெண் அளித்துள்ள புகாரில், “ஒருநாள் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை மர்லினா என்னை அடித்தார். எனக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் கத்தரிக்கோலை கொண்டு என் முடியை வெட்டிவிட்டுத் தாக்கினார். இதனால் கடும் காயங்கள் ஏற்பட்டது. என் கைகளை தூக்கச் சொல்லி குழம்பு கரண்டியை கொண்டு மர்லினா என் மார்பில் அடிப்பார். என்னை கீழே படுக்கவைத்து, என் முகத்தில் செருப்பு காலால் எட்டி உதைப்பார். இரண்டு கைகளிலும் கன்னத்திலும் தாடையிலும் சூடு வைத்துள்ளார். ஒருநாள் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி, என்னை கடுமையாக தாக்கினார். ஆண்டோ மதிவாணனும் என்னை இரண்டு முறை அடித்திருக்கிறார். ஒருமுறை ஆண்டோ தன்னுடைய மனைவி மெர்லினாவிடம், `நீ அந்த நாயை என்ன வேண்டுமானாலும் செய்துகொள். ஆனால், என் குழந்தை முன்னால் அடிக்காதே, அதனால் நம் குழந்தை பாதிக்கப்படுகிறது’ என்று கூறினார். அன்று முதல் அவர்களுக்கு இடையே பிரச்னை வந்தது. அதற்கும் நான்தான் காரணம் என்று கூறி, மர்லினா என்னை கடுமையாக அடித்து சித்ரவதை செய்தார். கடந்த எட்டு மாதங்களாக நான் அடிவாங்காத நாள்களே கிடையாது.

தினமும் என்னை அடித்து துன்புறுத்தினார். `நீயும் உன் அம்மாவும் ரெட் லைட் ஏரியாவிற்குச் சென்றால், நன்றாக சம்பாதிப்பீர்கள்…’ என்று கூறி, இழிவுபடுத்தினார். என்னை மோசமான வார்த்தைகளாலும், சாதிரீதியாகவும் மிகவும் இழிவாகப் பேசினார். கடந்த 12-ம் தேதி துணி காய வைக்கவில்லை என்று கூறி, குழம்பு கரண்டியால் வலது கண் நெற்றி தலைப்பகுதியில் கடுமையாக தாக்கினார்.
இதனால் எனக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. என்னை படிக்க வைப்பதாகக் கூறி பத்து, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை மர்லினா வாங்கி வைத்துள்ளார். அதை எனக்குப் பெற்றுத் தர வேண்டும். அவர்கள் இருவர்மீதும் பட்டியல் சாதியினர்/ பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கு தகுந்த நீதி, நிவாரணம் மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்காக சட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும், எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். “எம்.எல்.ஏ கருணாநிதியின் மருமகள் மர்லினா, மலேசியாவை பூர்வீகமாகக் கொண்டவர் எனத் தெரிகிறது. வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை ஒரு சைக்கோவைப்போல அவர் கொடுமை செய்திருக்கிறார். கடந்த சில மாதங்களில் இளம்பெண்ணின் கழுத்து, நெற்றி, இமை, கன்னம், முதுகுப் பகுதிகளில் மர்லினா ஏற்படுத்திய காயங்களின் தழும்புகளைப் பார்க்கும்போது, நமக்கே மனம் கொதிக்கிறது. செருப்பு, துடைப்பம், கரண்டி எனக் கையில் கிடைத்ததையெல்லாம் வைத்துத் தாக்கியிருக்கிறார். ஒருமுறை இளம்பெண்ணை, மர்லினா தாக்கியது குறித்து அவரின் கணவர் ஆன்டோ மதிவாணனுக்குத் தெரியவந்ததால், சிசிடிவி-யை அணைத்துவிட்டு, நள்ளிரவு வரை இளம்பெண்ணைச் சித்ரவதை செய்திருக்கிறார் மர்லினா.
வேலைக்குச் சேரும்போது, `உன்னை பி.பி.ஏ படிக்க வைக்கிறோம். இரண்டு லட்சம் ரூபாய் ஃபீஸ் கட்டியிருக்கிறோம். ஆன்லைனிலேயே நீ படிக்கலாம்’ என்று ஆசை வார்த்தைகள் கூறி, இளம்பெண்ணையும், அவரின் தாயையும் நம்ப வைத்திருக்கிறார்கள், ஆண்டோவும் மர்லினாவும். ஆனால், அவருக்கு நடந்த கொடுமைகள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, `அவள் சென்னையில் இல்லை. பெங்களூரில் எங்களுடன் இருக்கிறாள்’ என்று சொல்லியே அவர் தாயை ஏமாற்றியிருக்கிறார்கள்.

கடந்த தீபாவளி அன்றுகூட மர்லினா தன் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு, இளம்பெண்ணை வீட்டில் தனியாகப் பூட்டிவைத்துள்ளார். கடந்த வாரம் மர்லினாவை தொடர்புகொண்ட இளம்பெண்ணின் தாய், `நாங்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல்தான். எனவே, பொங்கலுக்கு அவளை கட்டாயம் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என கூறியிருக்கிறார். `நீங்கள் செல்லுங்கள் நாங்கள் கொண்டு வந்து விடுகிறோம்’ எனக் கூறி, கடந்த 15-ம் தேதி இரவு சொந்த ஊரில் ஆண்டோ தன் மாமனார் மற்றும் மாமியாருடன் காரில் கொண்டு வந்து விட்டுள்ளார். முன்னதாக, `உனக்கு 2 லட்சம் ரூபாய் ஃபீஸ் கட்டியிருக்கிறோம். ஊருக்குப் போய் ஏதாவது சொன்னால், உன் குடும்பத்தையே உள்ளே தூக்கி வைத்து விடுவோம்’ என ஆண்டோவும் மர்லினாவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து 15-ம் தேதி நள்ளிரவு நேரத்தில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நடந்ததைச் சொல்ல, அவை மருத்துவமனை பதிவுகளில் விபத்தில் ஏற்பட்ட காயங்களாகப் பதிவுசெய்யப்பட்டு, உள்ளூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 16-ம் தேதி உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். சம்பவம் நிகழ்ந்த இடம் திருவான்மியூர் என்பதால், 17-ம் தேதி இரவு திருவான்மியூர் அனைத்து மகளிர் போலீஸார் இளம்பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனர். எம்.எல்.ஏ-வின் மகன் மற்றும் மருமகள்மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
இந்தப் புகாரை விசாரித்து வரும் அடையார் துணை ஆணையர் பொன் கார்த்திக்கிடம் பேசினோம். “பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தைப் பெற்று, விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ கருணாநிதியின் குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் பெற முயன்றோம். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதைப் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.