வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கும், இந்திய – அமெரிக்க உறவுக்கும் மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேரி மில்பென் கூறியிருப்பதாவது: “அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என்பதை நான் உறுதியாக சொல்வேன். அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதை காண இங்கு பலரும் விரும்புகின்றனர். இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர் அவர்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும், ஏன் உலகத்துக்கே கூட இது முக்கியமான ஒரு தேர்தல் காலகட்டமாக இருக்கப் போகிறது என்று நான் நம்புகிறேன். குடிமக்களாக நம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த தேர்தல் காலகட்டத்தில் உங்கள் குரல் கேட்கவேண்டும் என்றும், நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் இருக்கும் என் அன்புக்குரிய குடும்பங்களை நான் ஊக்குவிக்கிறேன்.
நான் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர் என்பதில் எந்த ரகசியமும் இல்லை. அது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்தியாவும், இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுக்கும் பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர் என்று நான் நம்புகிறேன். குடிமக்களாக நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரும் சக்தி நம்மிடம் உள்ளது. அனைத்து மக்களுக்கும் ஏற்ற சிறந்த கொள்கைகளை கொண்டு வரும் அதிகாரம் நம்மிடம் உள்ளது. எனவே இந்த தேர்தல் காலத்தில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்களின் குரலையும் வாக்கையும் ஓங்கி ஒலிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறேன்.
தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான மோடியின் கொள்கைகள் நிச்சயமாக பெண்களை தலைமைத்துவத்தில் அதிகமாக ஊக்குவித்துள்ளன. திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக உருவானது, மற்றும் அமைச்சரவையில் அதிக பெண் தலைவர்களை வந்ததற்கும் பலவழிகளில் அவர்தான் காரணம். அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதன் மூலம் அமெரிக்க – இந்திய உறவுகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அந்த மேடையில், மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடி, பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் பெறுவதற்காக அவரது பாதம் தொட்டு வணங்கினார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
American singer Mary Millben touches PM Modi’s feet after singing National Anthem. pic.twitter.com/6ohFnnDxWG
— News Arena India (@NewsArenaIndia) June 24, 2023