சென்னை: “இந்தியாவில் கல்வி, மருத்துவம் என்றால் தமிழகத்தையே முதன்மை மாநிலமாகச் சொல்வார்கள். இன்றைக்கு விளையாட்டுத் துறையிலும் இந்தியாவிலேயே தமிழகம் மிக முக்கியமான மாநிலம் என்று கூறும் வகையில் உயர்ந்திருக்கிறது” என்று சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர், மத்திய இணை அமைச்சர்கள் நிஷித் பிராமானிக், எல்.முருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
முதலில் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர், பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேலோ இந்தியா லோகோவான வீரமங்கை சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாகூர், மத்திய இணை அமைச்சர்கள் நிஷித் பிரமானிக், எல்.முருகன் ஆகியோருக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
பின்னர், வரவேற்பு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, “தமிழக அரசு சார்பில் இந்த வரவேற்புரை ஆற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ஐ துவக்கி வைக்க வருகை தந்திருக்கும் பிரதமர் மோடியை வரவேற்கின்றேன். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் தமிழகத்தின் கனவு நனவாகியிருக்கிறது. இந்நிகழ்வை நடத்துவதற்கு அனைத்து வகையிலும் உதவிகரமாக இருந்த தமிழக முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2021-,ஆண்டில் இருந்து மாநில அளவிலும், இந்தியா அளவிலும், சர்வதேச அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக தமிழகத்தில் நடத்தி வருகிறோம். செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான நேரத்தில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து வெற்றிகரமாக தமிழக அரசு நடத்திக்காட்டியது. அது எங்களது திறமைக்கான சான்றாக விளங்கி வருகிறது. அதனை அடுத்து ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலக கோப்பை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம்.
எப்படி நம்முடைய தமிழக முதல்வரின் திராவிட மாடல் அரசில் அனைத்து துறைகளிலும், இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகின்ற வகையில் செயல்பட்டு வருகிறதோ, அதேபோல, நம்முடைய விளையாட்டுத் துறையிலும் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது. இந்தியாவில் கல்வி, மருத்துவம் என்றால் தமிழகத்தையே முதன்மை மாநிலமாக சொல்வார்கள். இன்றைக்கு விளையாட்டுத் துறையிலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு மிக முக்கியமான மாநிலம் என்று கூறும் வகையில் உயர்ந்திருக்கிறது.
பொதுவாக விளையாட்டுப் போட்டிகள் என்றால், வீரர்கள் வீராங்கனைகள்தான் பங்கேற்பார்கள். ஆனால், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் மூலம் பல்வேறு தரப்பினரையும் விளையாட்டு வீரர்களாக உருவாக்கியிருக்கிறோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 76 பயிற்சியாளர்களை நியமித்துள்ளோம். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஏராளமான பரிசுத் தொகைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது” என்று அவர் பேசினார்.