‘நினைத்தாலே இனிக்கும்’, ‘இனிது இனிது’…படமெல்லாம் பாத்துட்டு, படிக்கணும்-ங்கறதவிட ‘கமிட்’ ஆகணும்னு நினைச்சு காலேஜ் போன… போயிட்டு இருக்குற… போகப்போற செட்ல நானும் ஒருத்தி.
முதல் நாள் காலேஜ்… கிளாஸ்ல போய் உக்கார்ந்து பசங்க செஞ்ச முதல் காரியம் ‘நம்ம கிளாஸ்ல பொண்ணுங்க எத்தனை?’-ன்னு பாத்தது… பொண்ணுங்க பண்ண முதல் விஷயம் ‘நம்ம கிளாஸ்ல எத்தனை பசங்க?’-ன்னு தெரிஞ்சுகிட்டது. முதல் நாளே கிளாஸ் நோட்ஸ் மற்றும் நோட்டிஃபிகேஷன்களுக்காக டிபார்ட்மென்ட்டுலேயே வாட்ஸ் அப் குரூப் தொடங்க எல்லாரும் ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ மோடுல தான் இருந்தோம்.

என்னதான் படிக்கணும், வேலை வாங்கணும்னு ஏகப்பட்ட கனவுகள் இருந்தாலும்… இது எல்லாத்துக்கும் முன்னாடி சிங்கிள்களுக்கு ‘எப்படியாவது கமிட் ஆகிடணும்’-னும், கமிட்டடுகளுக்கு ‘நல்லா ஊரை சுத்திப் பார்க்கணும்’னும் கனவு…இல்ல…இல்ல…லட்சியம் இருந்துச்சு.
கொஞ்ச நாள் போகப்போக பலர் கமிட் ஆகத் தொடங்குனாங்க. சிலருக்கு பிரேக் அப் ஆச்சு. இதுல பலருக்கு திரும்பவும் வேற ஒருத்தரோட கமிட் ஆச்சு. அது நாள் வரையும் காதல் புயல் மையம் கொள்ளாத ஏழு, எட்டு பேரு மட்டும் சிங்கிளாவே சுத்திட்டு இருந்தாங்க. இந்த ஏழு, எட்டு பேரை ‘ஏதோ பாவம் பண்ணவங்க மாதிரி பாத்ததெல்லாம்’ தனிக்கதை. இப்போ விஷயத்துக்கு வருவோம்…
பொதுவாவே எந்த ஆண்கிட்ட கேட்டாலும், பெண்கள் பத்தி குத்தம் சொல்ற முதல் விஷயம் “அவ என் ஃபிரெண்ட்ஸ் கூட சேரக்கூடாது-ன்னு சொல்றா’ங்கறது தான். இதுக்கு காலேஜ் லவ் மட்டும் விதிவிலக்கு இல்ல. இங்கேயும் பொண்ணுங்க ‘நீ என் கூட பேசவே மாட்டேங்குற’, ‘எதுக்கு என்னை விட்டுட்டு அவங்களோட வெளியே போறே’-ன்னு சண்டை போடுவாங்க.
இதுவே பொண்ணுங்க சைடு பார்த்தா, ஒவ்வொரு பையனும் பொண்ணுங்களுக்கு போடற கண்டிஷன் வேற ரகம். அதுல நாலு, அஞ்சு எடுத்துவிடுறேன்…பாருங்க.

அவன் ஏன் உங்கிட்ட பேசறான்?
கமிட் ஆன பொண்ணு ஃபிரெண்ட்லியா கூட எந்தப் பையன் கிட்டயும் பழகக்கூடாது. ‘அவன் ஏன் உங்கிட்ட பேசறான். அவன் பார்வை சரியில்லை’-ன்னு ஏகப்பட்ட அறிவுரைகள், திட்டுகள் மற்றும் சண்டைகள்.
சேலை கட்டினா பசங்க தப்பா பார்ப்பாங்க…
காலேஜ்ல ஏதோ ஒரு நிகழ்ச்சி. எல்லாரும் சேலை கட்டிட்டு வரணும்னு சொல்லிட்டாங்க. ஆனா நூத்துல 99 பொண்ணுங்க ‘ஐயோ…நான் கட்டிட்டு வரமாட்டேன்’-ன்னு கோரஸா கத்தினாங்க. என்ன ஏதுன்னு கேட்டா, ‘என் ஆளுக்கு சுத்தமா பிடிக்காது. அவங்கிட்ட கேட்டா வேண்டாம்னு சொல்லிடுவான்’-ன்னு சொன்னாங்க. அது ஏன்னு விசாரிச்சா, ‘மத்த பசங்க நீ சேலை கட்டுனா தப்பா பாப்பாங்க. ஒரு பையன் சேலை கட்டுன பொண்ணை எப்படி பார்ப்பான்னு, பையன் எனக்குதான் தெரியும். அதனால நீ கட்டிட்டு வர வேண்டாம்”-ன்னு சொல்லுவான்னு சிரிச்சுகிட்டே சொன்னாங்க. இந்தப் பையன்களுக்கு சேலை மட்டுமில்ல லெகின்ஸும் ஆகாதுங்கறது குறிப்பிடத்தக்கது.
ஏங்க… வாங்க… போங்க… மரியாதை முக்கியமாம்ல
ரெண்டு லவ்வர்ஸ். பொண்ணு பையனை விட, மூணு மாசம் பெரியவங்க. ஆனாலும் அந்தப் பொண்ணு பையனை ‘ஏங்க, வாங்க, போங்க’-ன்னு தான் கூப்பிடணும். ஏன்னா அது தான் மரியாதையாம். ‘ஏங்க, வாங்க, போங்க’-ளோட மட்டும் நிக்காம, அந்தப் பையனோட அசைன்மென்ட் தொடங்கி பென் டிரைவ் வரை பொறுப்பு அந்தப் பொண்ணோடது தான். காரணம் கேட்டா…இது எல்லாம் கல்யாணம் மற்றும் குழந்தையை பொறுப்பா பாத்துக்கறதுக்கான முன்னோட்டமாம்.

லைவ் அப்டேட் அவசியமாம்
காலேஜ்க்கு கிளம்பினதும் மேக் அப்போட ஒரு செல்ஃபி, காலேஜ் வந்ததும் ‘வந்துட்டேன்’-னு மெசேஜ், சாப்பிடறப்போ ‘சாப்பிடுறேன்’-ன்னு மெசேஜ், காலேஜ்ல இருந்து கிளம்பும்போது ‘கிளம்பிட்டேன்’னு மெசேஜ், வீட்டுக்குப் போனதும் ‘போயிட்டேன்’-ன்னு மெசேஜ். இதுக்கு இடையில 10-15 கால்கள், 100-150 மெசேஜ்கள்-ன்னு ஒரு பொண்ணு அவங்களோட லவ்வருக்கு லைவ் அப்டேட் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. இதுல ஒண்ணு மிஸ் ஆனாக்கூட அவ்வளவு தான். மணிக்கணக்கா ‘சாரி…சாரி…சாரி…’ என்ற சத்தம் மட்டும் கிளாஸ், கேன்டீன், பஸ்ன்னு எல்லா பக்கமும் கேட்டுகிட்டே இருக்கும்.
துப்பட்டா ‘மஸ்ட்’ மை டியர்
இது எல்லா கண்டிஷன்கள்லயும் இது தான் அல்டிமேட் . அந்தப் பொண்ணு அவங்க அண்ணன் வீட்டுல இருந்தாலும், என்ன டிரஸ் போட்டிருந்தாலும் துப்பட்டா போடாம இருக்கக்கூடாது. அடுத்ததா அவங்க அப்பா பக்கத்துல ‘உக்காரக்கூடாது…தேவையில்லாமல் பேசக்கூடாது…அப்பா பக்கத்துல படுத்து தூங்கக்கூடாது’. அதுக்கு அந்தப் பையன் சொல்லும் காரணம் ‘அவங்களும் ஆம்பளைங்க தான். அதனால அவங்களை நம்ப முடியாது’.

என்னங்க இதுக்கே உங்க மனசு பகீர்ன்னு இருக்கா? இது எல்லாத்துலயும் கொடுமையோட உச்சமே, ‘இந்த கண்டிஷன்களுக்கு பெண்கள் எதிர்ப்பே சொல்லமாட்டாங்க. அவங்க இதெல்லாம் ரசிப்பாங்க’. ஏன்னு காரணம் கேட்டா, அவங்க பதில் ‘அவன் என் நல்லதுக்குதான சொல்றான்’-ங்கறது தான் கொடுமையிலும் கொடுமை.