தமிழ் சினிமா இந்த வருடம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படைப்புகளில் முக்கியமானது பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் `தங்கலான்’. இதில் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிடோர் நடித்துள்ளனர். சமீபத்தில் மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், நடிகை பார்வதி `தங்கலான்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், தன்னுடைய கதாபாத்திரம் குறித்தும் முதன்முறையாக சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவற்றை இங்கே காண்போம்.

‘தங்கலான்’ வாய்ப்பு தனக்கு வந்தது குறித்துப் பேசியவர், “ஒரு நாள் இயக்குநர் பா.இரஞ்சித்திடமிருந்து, ஓர் அழைப்பு வந்தது. அவர் என்னைப் பல மாதங்களாகத் தொடர்புகொள்ள முயற்சி செய்வதாகக் கூறினார். எல்லாரும் ‘பா.இரஞ்சித்தின் போனை உடனே அட்டெண்ட் பண்ணு’ என்று சொன்னார்கள். ஆனால், நான் ஏற்கெனவே அவருடன் பேசியிருக்கிறேன். நாங்கள் ஏற்கெனவே இரண்டு புராஜெக்ட்டைப் பற்றிப் பேசியிருக்கிறோம். ஆனால் அது வொர்க் அவுட் ஆகவில்லை. பிறகு நான் அவரோடு சேர்ந்து வேலை செய்வதற்காகக் காத்திருந்தேன்.
இந்த முறை, அவர் எனக்கு ஒரு கதை சொன்னார். முதல் முறை சொன்னபோது, எனக்கு முழுக்கதையும் புரியவில்லை. சரி நாமே குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தேன். ஏனென்றால் சில இயக்குநர்கள் மேல் இருக்கிற நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே நான் அவர்களுடைய கதைகளில் நடித்திருக்கிறேன். அதே மாதிரிதான், இந்தக் கதைக்குள்ளும் நான் நுழைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
‘தங்கலான்’ கங்கம்மாள் பாத்திரமாகத் தான் மாறியது குறித்து விவரித்தவர், “நான் என்னுடைய கதாபாத்திரத்துக்குள் அவ்வளவு ஆழமாகப் போவேனென்று அப்போது எனக்குத் தெரியாது. ‘தங்கலான்’ கங்கம்மாள் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பெண். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பெண்களைப் பற்றி நாம் பெரிதாக எதையும் கேட்டதில்லை. ஏன் அவர்களைப் பற்றிச் சரியாக எழுதப்பட்டதுகூட இல்லை.

எனவே இந்தச் சவாலைச் சமாளிக்க என்னிடம் எந்தவொரு ஐடியாவும் இல்லை. அதனால் இரஞ்சித் மற்றும் அவரின் டீமோடு ஆராய்ச்சியில் இறங்கினோம்.
ஷூட்டிங் நடந்த எட்டு மாதங்களில், ஷூட்டிங் சென்ற ஒவ்வொரு நாளும் கங்கம்மாவாகத்தான் சென்றேன். மொத்த உலகமும் எனக்காக நின்றது மாதிரியான ஓர் உணர்வு. என்னுடைய முழு கவனமும் அந்தக் கதாபாத்திரத்தின் குணத்தை நியாயப்படுத்துவதிலும், அதற்கு மரியாதை செய்வதிலும்தான் இருந்தது.
கங்கம்மாள் ஒரு தாய். ஆனால், அவள் தாய் இல்லை. நான் ஒரு வளர்ப்பு நாய்க்குத்தான் அம்மாவே தவிர, ஒரு மனிதக் குழந்தைக்கு இல்லை. இரஞ்சித் என்னிடம் சொல்லியது என்னவென்றால், ‘கங்கம்மாள்ன்றவ ஒரு தாய். இனி அதை நீங்க எப்படி எடுத்துக்குறீங்கன்றது, உங்களைப் பொறுத்தது’ என்றார். அது இரஞ்சித் உலகத்தில் உள்ள அம்மாவாகவோ, ஸ்கிரிப்ட் பேப்பரில் உள்ள அம்மாவாகவோ இல்லை. அம்மா என்பதற்கு என்னென்ன அர்த்தங்கள் உள்ளதோ, அந்த எல்லாவற்றுக்குள்ளேயும் இந்தக் கதாபாத்திரம் சென்று வந்துள்ளது.

‘எத்தனை வகையான அம்மாவாக நான் இருக்க முடியும்?’
பெண் என்பவள் ஒரு தாய்! தாயாவதுதான் ஒரு பெண்ணை முழுமையடைச் செய்யும் என்பது போல நாம் அம்மாவைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறோம். சிலர் அதை Child free, Child less என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி தாய்மை என்பது, ஒரு மனநிலை. என்னைப் பொறுத்தவரைக்கும் அந்த மனநிலைதான் பெற்றோர், வளர்ப்போர் எல்லாம். இதை நீங்கள் கங்கம்மாளில் பார்ப்பீர்கள்” என்றார் உறுதியாக!
அந்தக் கதாபாத்திரம் குறித்து மேலும் சில ரகசியங்களைப் பகிர்ந்தவர், “கங்கம்மாள் என்ற கதாபாத்திரம் வேற்றுலகத்தோடு தொடர்பு கொண்ட கதாபாத்திரம். அவள் கடவுளோடு தொடர்பில் உள்ள ஒரு பெண். அவளுக்குக் கடவுளிடம் இருந்து செய்திகள் வரும். அது, ஒரு ட்ரான்ஸ் நிலை. இப்படி ட்ரான்ஸ் நிலையில் இருப்பதை நான் எங்கேயும் பார்த்ததில்லை. எனக்கு அதைப் பற்றிய ஐடியாகூட இல்லை.

சில மனிதர்கள் ட்ரான்ஸ் நிலையில் நின்று பேசுகிற மாதிரி, நான் யூடியூபில் சில வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்ற ஐடியா கிடைக்கவில்லை. இயக்குநரும் அதை முழுதாக என்னிடம் சொல்ல விரும்பவில்லை. அவர், அதை விளக்கமாகச் சொல்லிவிட்டால், கதாபாத்திரத்தின் தன்மை குறைந்துவிடும் என்று அவர் நினைத்தார். நாம்தான் அதை எடுத்துக்கொண்டு ஓட வேண்டும். அதனால், அதைப்பற்றி, நிறைய வேற்றுலக கதைகளை உருவாக்க ஆரம்பித்தேன். மார்வெல் யூனிவெர்ஸ்ஸில் உள்ளது போல் கதாபாத்திரங்களை, கடவுள்களை உருவாக்கினேன்.

ஆனால், அதுவும் கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றிவிடும் என்று தோன்றியது. என்னை நான் மனுஷியாக உணரவில்லை. எனக்குத் தோலிருப்பதாகவோ, உடலிருப்பதாகவோ உணரவில்லை. நான் உருவாக்கிய கதைகள் எல்லாம் இரஞ்சித்துக்குத் தெரியாது. அவருக்கு என்னிடம் இருந்து என்ன தேவைப்பட்டதோ, அது என் நடிப்பில் வந்துவிடும் என்று நான் நம்பினேன்” என்று நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.