பெருமாள் ஶ்ரீராமராக அவதாரம் செய்தபோது இந்த பாரத தேசத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் தம் பாதம் பட நடந்தார். அவ்வாறு அவர் நடந்த, இருந்த, கிடந்த தலங்கள் எல்லாம் முக்கியமான திருத்தலங்களாக மலர்ந்தன. குறிப்பாகத் தமிழகத்தில் ஶ்ரீராமரோடு தொடர்புடைய தலங்கள் ஏராளம். அவற்றில் ஒன்று நரிமணம்.
ஶ்ரீராமர் வனவாசத்தின்போது ஒருநாள் இரவு தங்கிய வனம் இது என்பார்கள். ஹரியாகிய ஶ்ரீராமர் தங்கிச் சென்றதால் ஹரிவனம் என்று பெயர் பெற்றது. ஹரிவனமே பிற்காலத்தில் நரிமணம் என்று ஆனது என்கிறார்கள் பெரியோர்கள். காவிரி டெல்டா பகுதியில் இருக்கும் சிறிய கிராமம் நரிமணம், புராதானமான இந்தத் தலத்தில் பழைமையும் பெருமையும் வாய்ந்த இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்று ஶ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில். மற்றொன்று ஶ்ரீநிவாஸ பெருமாள் கோயில். இந்த ஊர் குறித்த பல்வேறு செய்திகள் அகஸ்தீஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்கிறார்கள்.

ஊரின் நடுவே அமைந்திருக்கும் ஶ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சுவாமி ஶ்ரீதேவி-பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தற்போது இங்கு இருக்கும் கோயிலின் கட்டுமானம் சுமார் 300 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். ஆலயத்தின் வாசலிலேயே அமைந்திருக்கும் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் திருக்காட்சி இத்தலம் ஹரிவனமே என்பதைப் பறைசாற்றுகிறது.
கருவறையில் பெருமாள் சங்கு சக்ர கதா தாரியாக, அபய ஹஸ்தத்தோடும், திருப்பதி பெருமாள் போல ஒரு கையை இடையில் வைத்துக் கொண்டும், ஶ்ரீதேவி-பூதேவி தாயாரோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு வந்து வேண்டிக்கொண்டால் வாழ்வில் சகல துன்பங்களும் நீங்கும். செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.
இத்தகைய சிறப்புகளை உடைய திருத்தலத்தில் ஜனவரி 22 -ம் தேதி நடைபெற இருக்கும் அயோத்தி ஶ்ரீராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கின்றன. இதுகுறித்துக் கோயிலைச் சேர்ந்த கணேச குருக்களிடம் கேட்டோம்.

“இது புராதானமான க்ஷேத்திரம். ஶ்ரீராமர் வந்து தங்கியிருந்து அருள் செய்த இடம் என்பதால் ஹரிவனம் என்பது இந்தத் தலத்தின் பெயர். ஶ்ரீராமர் கோயில் அயோத்தியில் திறக்கப்படும் நாள் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இந்த நாளில் உலகம் முழுவதும் இருக்கும் பக்தர்கள் ஶ்ரீராமநாம ஜபம் செய்ய வேண்டும். சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து வணங்க வேண்டும். அந்த அடிப்படையில் நரிமணம் ஶ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். காலையில் சிறப்புத் திருமஞ்சனம் நடக்க இருக்கிறது. சரியாக மதியம் 12 மணிக்கு மேல் அங்கே பிராணப் பிரதிஷ்டை நடைபெறும் நேரத்தில் மகா தீபாராதனை நடத்த இருக்கிறோம். அவ்வமயம் பக்தர்கள் கூடி ராம நாம ஜபம் செய்வார்கள். மேலும் நாடி வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.