அயோத்தி: பிரதமர் நரேந்திர மோடி ஒரு தபஸ்வி என்று ராமர் கோயில் திறப்பு விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரையாற்றினார். அப்போது அவர், “500 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை ராமர் இன்று அயோத்தி திரும்பியுள்ளார். அவருடைய கருணையால் இந்த பொன்நாளை இன்று நாம் காண்கிறோம். அவர் மீது உள்ள மிகப் பெரிய மரியாதையை அவருக்கு காணிக்கையாக ஆக்குகிறோம். இந்த சகாப்தத்தின் வரலாறு மிகவும் சக்தி வாய்ந்தது. ராமரின் கதைகளை யார் கேட்டாலும் அவர்களின் துக்கங்களும் வலிகளும் நிச்சயம் காணாமல் போகும்.
இன்று குழந்தை ராமர் மட்டும் திரும்பிவரவில்லை. இந்தியாவின் பெருமையும் மீண்டு வந்திருக்கிறது. துயரங்களில் இருந்து உலகுக்கு நிவாரணம் அளிக்கும் புதிய பாரதம் நிச்சயம் உருவாகும் என்பதன் அடையாளமாக இன்றைய நிகழ்வு மாறி உள்ளது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்கு முன் கடுமையான விரதங்களை பிரதமர் நரேந்திர மோடி அனுஷ்டித்தார். அவரை நீண்ட காலமாக நான் அறிவேன். அவர் ஒரு தபஸ்வி” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், “அயோத்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் தற்போது ராம மயமாகி இருக்கிறது. ராமர் அவதரித்த திரேதா யுகத்திற்குள் நாம் வந்துவிட்டது போன்ற உணர்வை இது ஏற்படுத்துகிறது. நாம் எடுத்த உறுதியின் விளைவாக அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இன்று அயோத்தியின் தெருக்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் எதிரொலிக்கவில்லை. ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை. மாறாக, தீப உற்சவமும் ராம உற்சவமும் இங்கு இருக்கிறது. அயோத்தி தெருக்களில் ராம சங்கீர்த்தனம் எதிரொலிக்கிறது. குழந்தை ராமரின் கோயில் நிர்மாணம் என்பது ராம ராஜ்ஜியத்திற்கான அறிவிப்பு” என தெரிவித்துள்ளார்.
பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பின் பகவான் ராமர் அயோத்திக்கு வந்துவிட்டார்” என்று ராமர் கோயிலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதன் விவரம்: “நம்மை பகவான் ராமர் நிச்சயமாக மன்னிப்பார்” – அயோத்தி கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி பேச்சு