`ஜல்லிக்கட்டு’, `சுருளி’, `நண்பகல் நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட பிரபல மலையாள திரைப்படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `மலைக்கோட்டை வாலிபன்’. வரலாற்றுப் படமான இதில் மோகன்லால் நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான் பகுதிகளிலும், ஜெய்சால்மரில் இருக்கும் பழைமையான கோட்டைகளிலும் நடந்தது. மலையாளத் திரையுலகில் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் மோகன்லால் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இத்திரைப்படம் இந்த வாரம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள கன்னட நடிகரும், டிவி தொகுப்பாளருமான டேனிஷ் சைட், படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
இதுபற்றி பேசிய டேனிஷ், “ஜெய்சால்மர், பொக்ரானில் இருக்கும் பழைமையான கோட்டைகளில் படப்பிடிப்பு நடந்தது. ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பில் நான் நடித்திருந்தேன்.
படக்குழுவினர் அனைவருக்கும் இந்தப் படப்பிடிப்பு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. நான் தனிமை காரணமாக உடல் மற்றும் மனதளவில் மிகுந்த அழுத்தத்திற்குள்ளானேன். காரணம் நாங்கள் அனைவரும் குடும்பத்தைவிட்டு வெகுதூரம், வெகு நாள்கள் பிரிந்திருந்தோம். அந்தச் சமயத்தில் இது குறித்து இயக்குநர் லிஜோவிடம் எடுத்துச் சொன்னேன்.

அவர் என்னை அழைத்து நாங்கள் எடுத்துவரும் படத்தின் ஒரு 10 நிமிடக் காட்சியை எனக்குக் காட்டினார். அது அவ்வளவு அற்புதமாய் இருந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்கு எனர்ஜி வந்துவிட்டது. படம் பார்க்கும் அனைவருக்கும் அதே உணர்வு நிச்சயம் ஏற்படும். படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதை நீங்கள் திரையில் பார்க்கும்போது உணர்வீர்கள்” என்று கூறியுள்ளார்.