கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் வயல் அழிவிற்கான இழப்பீடு கிடைக்க ஆவன செய்யக்கோரி இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தினால் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் மகஜர் ஒன்று நேற்று (22) கையளிக்கப்பட்டது.
இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற விவசாயிகள் தமக்கு காலபோக நெற் செய்கையில் ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
மேலும், குறித்த மகஜரின் பிரதி கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கிடைக்கும் வகையில் அவரது இணைப்பாளர் ரட்ணம் அமீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரில் உள்ளடக்கப்பட்டிருப்பதாவது: நெல் வயல் அழிவிற்கான இழப்பீடு கிடைக்க ஆவன செய்யக்கோரல் 2023 – 2024 காலபோக பயிற்செய்கை எமது மாவட்டத்தில் ஏறக்குறைய எழுபத்துரெண்டாயிரம் (72,000) ஏக்கர் வரை மேற்கொள்ளப்பட்டு, பெருமளவிலான வயல்கள் கட்டுப்படுத்த இயலாத நோயினாலும், மழை வெள்ளத்தினாலும் பெரும் அழிவை சந்தித்துள்ளோம். கடந்த போகங்களில் நாம் ஏக்கருக்கு 1.5மெற்றிக் தொன் பெற்றுவந்த நிலையில், தற்போது 0.5மெற்றிக்தொன்னாலும் குறைவான அறுவடையே கிடைக்கின்றன.
எனவே தயவுசெய்து எம்மை இப்பொருளாதார தாக்கத்திலிருந்து பாதுகாத்து எதிர்வரும் போக பயிற்செய்கையில் ஆர்வத்துடன் ஈடுபட எமக்கு அரச நிவாரணம் கிடைக்க ஆவன செய்ய பணிவாக வேண்டுகின்றோம்.
ஒரு ஏக்கருக்கு நெல் செய்கைக்கு 130.000.00ம் ரூபா வரை செலவு செய்து. செலவில் 15,000.00ம் ரூபாவை கூட பெற இயலாதவர்களாகவும் ஏறக்குறைய 115,000.00ம் ரூபா வரை ஒரு ஏக்கருக்கு நட்டம் அடைந்தவர்களாக உள்ளோம் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு தருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மகஜர் கையளித்த பின்னர் தற்போதைய காலநிலையில் நெல்லினை உலர்த்தவும் முடியவில்லை. நெல்லுக்கான நிர்ணய விலை இல்லாமையால் தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அரசாங்க அதிபரிடம் கூறினர்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தாலும் கோரப்பட்டுள்ளது. அத்துடன் அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் இது அமைச்சரால் போடப்பட்டு சம்மந்தப்பட்ட அமைச்சரிடமும் பேசப்பட்டது. இது தொடர்பில் தீர்வு எட்டப்படும். மேலும் குறித்த மகஜர் ஜனாதிபதிக்கு உடன் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.