‘நிதி ஆயோக்’ அமைப்பின் சி.இ.ஒ.வாக இருக்கும் பி.வி.ஆர் சுப்பிரமணியம் கடந்த ஆண்டு சி.எஸ்.இ.பி (CSEP-Centre for Social and Economic Progress) என்கிற அமைப்பு நடத்திய மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் மத்திய அரசாங்கமானது நிதிநிலை குறித்த அறிக்கைகளை வெளியிடுவதில் கையாளும் தந்திரங்களை புட்டுப்புட்டு வைத்திருக்கிறார். அந்த காணொளியில் `பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கமானது வரிப் பங்கீட்டை நேர்மையாக மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை’ என்கிற தகவலை அவர் எடுத்துரைத்தது தற்போது வெளியாகி, நாடு முழுக்க அதிர்ச்சி கிளப்பியுள்ளது. இவர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசாங்கமானது, மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிதிப் பகிர்வைக் குறைப்பதற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து முக்கிய தகவல்களைப் பொருளாதார வல்லுநரும், எழுத்தாளருமான வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களுடன் பேசினோம்.
மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசு?!
“கடந்த 10 ஆண்டுகளாகவே நிதி பங்கீடு மற்றும் அதிகார பங்கீடு ஆகியவற்றில் மத்திய அரசு தலையிட்டு வருகிறது. அரசமைப்பு சட்டத்தின் படி, நாடு முழுவதும் இருந்து வசூலிக்கப்படும் வரி வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இதற்காக இந்திய அரசமைப்பின், சரத்து-280-ன் கீழ் நிதி ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இது ஐந்தாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசால் நியமிக்கப்பட்டு மாநிலங்களுக்கு எவ்வாறு நிதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை வழங்குகின்றது.
நிதி ஆணையம் அரசமைப்பின் விதிப்படி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதில் பணிபுரியும் அதிகாரிகளை நியமிப்பது மத்திய அரசு என்பதால், அதன் தலையீடு பெருமளவு இருக்கின்றது. 9-வது நிதி ஆணையத்திற்கு பிறகு அதன் தலையீடு இன்னும் அதிகமானது. குறிப்பாக, கடந்த 15-வது நிதி ஆணையத்தில் நாட்டின் பாதுகாப்பு செலவுக்கு பிறகு மற்ற செலவுக்கு நிதி ஒதுக்கலாம் என்ற ஒரு விதியை ஏற்படுத்த மத்திய அரசு முற்பட்ட போது, அது மாநிலங்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருந்தபோது சொத்து வரி ரத்து செய்யப்பட்டது. அதுபோலவே, கார்ப்பரேட் வரிக்கு சலுகை கொடுத்தால் முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் குறைக்கப்பட்டது. இவை, அனைத்தும் நேர்முக வரிகள் ஆகும். இந்த வரிகள் பெரும்பாலும் பணம் படைத்த வர்க்கத்தினருக்கு விதிக்கப்படுவது. பெரும் முதலாளிகளுக்கு காட்டும் சலுகைகளில் கொஞ்சமாவது நாட்டு மக்கள் பயன்பெரும் வகையில் வழங்கியிருக்கலாம். ஆனால் அதை மத்திய அரசு தொடர்ந்து செய்யாமல் தட்டிக்கழித்துக் கொண்டே வருகிறது.
2019-ம் ஆண்டு மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், பெருமளவு நுகர்வு இல்லை, பொருட்கள் சந்தையில் விற்கவில்லை என பெரும் முதலாளிகள் கோரிக்கை வைத்த போது அதே அண்டு அக்டோபர் மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர்களுக்கான கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். தயாரிப்புத் துறையில் அக்டோபர் 2019-க்கு பிறகு தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இது அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒரு போக்காகும். இந்த போக்கு பெரும் முதலாளிகளுக்கு உதவி செய்து நாட்டில் முதலீடுகளையும் வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கலாம் என்ற தவறான பொருளாதார கொள்கையின் வெளிப்பாடாகும். இது அவர்களின் கார்ப்பரேட் இந்துத்துவா சிந்தனையின் ஒரு பகுதியாகும்.
மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டது!
ஜிஎஸ்டி வரியின் மூலம் மாநிலங்களின் மறைமுக வரி விதிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், புகையிலை மற்றும் மது இவற்றைத் தவிர மற்ற அனைத்திற்குமான வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யும். ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைவருக்கும் சமமான வாக்களிக்கும் உரிமை இல்லை, அங்கு மத்திய அரசு மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை தன்னிடம் வைத்துள்ளது. இது அப்பட்டமாக மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். இது எளிதாக கடந்து செல்ல வேண்டிய விஷயம் அல்ல, எடுத்துக்காட்டாக தமிழ்நாடு என்ற மாநிலம் இங்கிலாந்து மற்றும் பிரான்சுக்கு சமமான மக்கள் தொகையை கொண்டுள்ள ஒரு மாநிலம். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. ஆனால், அந்த அரசுக்கு வரி விதிக்கும் உரிமை இல்லை என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.
மாநிலங்களின் வரி வருவாய் குறைந்தாலும், அவற்றிற்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ரெட்டி தலைமையிலான நிதி ஆணையம் 42 சதவிகிதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை 32 சதவிகிதமாக குறைத்து அளிக்க சொல்லி பிரதமர் மோடி, ரெட்டி மற்றும் பி. வி. ஆர். சுப்பிரமணியம் ஆகியோருடன் நடந்த கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதை நிதி ஆணையம் வலுவாக மறுத்துவிட்டது. அதுபோலவே, மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் மாநில அரசின் நிதி பங்கை அதிகரித்தனர். இதுபோல மறைமுகமாக பல வேலைகள் மாநில உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசு நடத்தியிருக்கிறது.

ஜிஎஸ்டி வரி பகிர்வு முறை?!
42 சதவிகிதம் மட்டுமே மாநிலங்களுக்கு ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம், குஜராத் முதல்வராக மோடி இருந்த பொழுது அவர் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 50 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலை பயன்படுத்தி மாநிலங்களுக்கிடையே ஜிஎஸ்டி வரி பகிர்வில் உள்ள சிக்கல்களின் வாயிலாக மாநிலங்களுக்கும் இடையிலான மோதலை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. ஜிஎஸ்டி வரி பகிர்வு முறை ஜனநாயகபூர்வமான கலந்துரையாடலுக்கு பின் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

இந்த நிதி சிக்கல் என்பது வட இந்தியா-தென்னிந்தியா பிரச்சனையாக அணுகுவது சரியான அணுகுமுறை அல்ல, இது மாநில உரிமைகளை வேண்டி மத்திய அரசின் சர்வாதிகார போக்கிற்கு எதிரானதாக அமைய வேண்டும். மத்திய-மாநில நிதி உறவு சார்ந்த விஷயங்களில், ஒட்டுமொத்த அரசமைப்புச் சட்டமும் மாநிலங்களுக்கு சாதகமாக திருத்தி அமைக்கப்பட வேண்டும். இது சரியான முறையில் அணுகப்படவில்லை என்றால் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்தாக முடியும் அபாயம் உள்ளது.
கொண்டாட வேண்டிய விஷயம் அல்ல!
ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்திருப்பது கொண்டாட வேண்டிய விஷயம் அல்ல. ஜிஎஸ்டிக்கு முன் ஒரு தொழில் முனைவோர் ரூ. 1.5 கோடிக்கு மேல் நிகர விற்பனை மதிப்பு இருந்தால்தான் கலால் வரி செலுத்துவார். தற்பொழுது ரூ. 20 லட்சம் நிகர விற்பனை மதிப்பு இருந்தாலே ஒருவருக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி, அதற்கான படிவம் நிரப்புவது கணக்காளரை நாடுவது போன்ற பிற செயல்முறை சிக்கல்களும் உள்ளன. இது சிறு குறு வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோரின் மீதான தாக்குதல் ஆகும்.

அது மட்டுமின்றி, மாநிலங்களுடன் வரி பகிர்வு செய்யக்கூடாது என்பதற்காகவே பல வரிகளை, செஸ் கூடுதல் கட்டணமாக விதித்தனர். செஸ் வரி மாநிலங்களுடன் பகிர்ந்து அளிக்கப்படாது அது முழுக்கவே மத்திய அரசின் வருவாயாக கருதப்படும். இதன் காரணமாகவே, 2014-16 காலகட்டத்தில் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் அதன் விலை குறையாமலேயே இருந்தது. 2014 காலத்தில் 10 சதவிகிதமாக இருந்த செஸ் வரி தற்போது 24 சதவிகிதமாக உள்ளது. பாஜக அரசு இவற்றையெல்லாம்தான் கோ-ஆப்பரேட்டிவ் ஃபெடரலிசம் என்கிறது. ஆனால் நடைமுறையில் இது கொலை செய்யும் ஃபெடரலிசம்.
விலை போகும் இந்தியா?!
இதன் இன்னொரு பகுதியாக அரசின் வரவு செலவு பற்றாக்குறை இடையேயான இடைவெளி அதிகரித்தால் அந்நிய செலாவணியில் அது பாதிப்பை ஏற்படுத்தும். வரவை கூட்டி இந்த இடைவெளியை குறைக்கலாம். ஆனால், செலவை குறைத்தே இந்த இடைவெளியை அரசு கட்டுக்குள் வைத்திருக்கிறது. அவ்வாறு அரசின் வரவை உயர்த்தினால் அது பெரும் முதலாளிகளின் கோபத்திற்கு உள்ளாகும். எனவே, செலவை குறைத்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்கு உட்படுத்தலாம் என்ற எண்ணத்தில் அரசு செயல்படுகிறது. இதுவும் போதாத பட்சத்தில் வரவை அதிகரிக்க, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி பற்றாக்குறையை அரசு குறைக்க முயற்சிக்கிறது.

இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி பேசுகின்றவர்கள், அதானியின் ஊழலை கேள்விக்குட்படுத்தினால் அது இந்தியாவின் மீதான தாக்குதலாக சித்தரிக்கின்றனர். இந்த போக்கு உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் உடமையாளர்களுக்கு சாதகமாகவும் உள்ளது. இதற்கு தேசபக்தியையும் துணைக்கு அழைக்கின்றனர். இது தொடர்ந்தால் இந்தியா விலை போகும் அபாயத்தையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கும்” என்றார் காட்டமாக.