மதுரா கிருஷ்ண ஜென்மபூமி விவகாரத்தில் புதிய வழக்கு: இடிக்கப்படுவதற்கு முன்பிருந்த கருவறையை கண்டறிய மனு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்திலுள்ள கிருஷ்ணஜென்மபூமி கோயில் விவகாரத்தில் மதுரா நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இக்கோயில், இடிக்கப்படுவதற்கு முன்பாக இருந்த கருவறையை கண்டறிந்து அடையாளப்படுத்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை கடந்த நவம்பர் 9, 2019-ல் வழங்கியது. இதையடுத்து, இதேபோன்ற விவகாரத்திலுள்ள உத்தர பிரதேசத்தின் வாரணாசிமற்றும் மதுராவில் முக்கியக் கோயில்களை ஒட்டியுள்ள மசூதிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரங்களிலும் பலவழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தவகையில் ஒரு புதிய மனு மதுரா நீதிமன்றத்தில் தாக்கலாகி விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணர் பிறந்த இடம்: மதுராவிலிருந்த கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் கேஷவ் தேவ் கோயில் இருந்தது என்றும், அது முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கடந்த 1669-79-ம் ஆண்டுகளுக்கு இடையே இடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்த இடத்தின் ஒரு பகுதியில் தற்போதுள்ள ஷாயி ஈத்கா மசூதி அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அதன் பிறகு மீதியிருந்த பகுதியில் புதிதாக கிருஷ்ணஜென்மபூமி கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இக்கோயிலின் கருவறை உள்ள இடம் உண்மையானது அல்ல எனவும், பழைய கோயிலின் கருவறையை கண்டறிந்து அடையாளப்படுத்தும்படியும் வழக்கு தொடுக்கக்கப்பட்டு உள்ளது.

அவுரங்கசீப் இடித்தார்: இந்த மனுவை மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் பி.வி.ரகுநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் இடிக்கப்பட்ட பழமையான கோயிலில் இருந்ததுதான் கிருஷ்ணர் பிறந்த உண்மையான இடம். இதை முகலாய மன்னர் அவுரங்கசீப் இடித்து விட்டார். எனவே, முன்பிருந்த உண்மையானக் கருவறையை கண்டுபிடித்து அதை பொதுமக்கள் அறியும்படி அடையாளப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் ரகுநந்தனின் வழக்கறிஞர் பங்கஜ் ஜோஷி கூறும்போது, ‘இப்பணியை மேற்கொள்ள இந்திய தொல்லியல் ஆய்வகம், உபி அரசின் ஆன்மிகத்துறை மற்றும் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் அறக்கட்டளை ஆகியோருக்கு உத்தரவிட மனுவில் கோரப்பட்டுள்ளது. இதை அடையாளப்படுத்துவதன் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றாமல் உண்மையை அறிய வைக்க வேண்டும். இதுதொடர்பான எங்கள்மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கவே காங்கிரஸ் ஆட்சியில் புனிதத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 கொண்டுவரப்பட்டது. இந்த சட்டமும் தவறானது எனவும், அதை ரத்து செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.