திரையுலகில் 12 ஆண்டுகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்

வாரிசுகள் நிறைந்த சினிமாவில் தனது திறமையால், முயற்சியால் நுழைந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இன்றிருப்பவர் சிவகார்த்திகேயன். 2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வெளியான 'மெரினா' படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்த ஒரு சில வருடங்களிலேயே பலரின் மனம் கவர்ந்த நடிகராக உயர்ந்தார். இன்றுடன் சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்த 12 ஆண்டுகளில் 20 தமிழ்ப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இவற்றில் “எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், காக்கி சட்டை, நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான்,” ஆகிய படங்கள் வியாபார ரீதியாக குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களாக அமைந்தது. “மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரெமோ, வேலைக்காரன், மாவீரன், அயலான்” ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அந்தப் படங்களில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் குறிப்பிடும்படியாகவே இருந்தது.

அவரது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்றைய பிறந்தநாளில் அந்தப் படம் குறித்து ஏதும் அப்டேட் வருமா என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இன்றைய போட்டி நிறைந்த உலகத்தில் சக போட்டியாளர்களை முந்திக் கொண்டு முன்னணிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார். அதே சமயம் தனது இமேஜ் மீதும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இத்தனை வருட சினிமா அனுபவம் அவருக்குப் புரிய வைத்திருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.