India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி விளையாடமாட்டார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு மாற்று வீரர் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் உயர் அதிகாரிகள் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாகவும், இதனால் தான் அவர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கவில்லை என்றும் சமீபத்தில் முன்னாள் ஆர்சிபி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறி இருந்தார்.
முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி பங்கேற்காதது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், அவரின் தனிப்பட்ட காரணங்களால் போட்டியில் இருந்து விலகி உள்ளார். ஒவ்வொருவரது தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கூறி இருந்தது. விராட் கோலி அணியில் இல்லாததால் இந்தியாவின் மிடில் ஆர்டர் மிகவும் பரிதாபமாக உள்ளது. ஷுப்மான் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தவறவிட்டு வருகின்றனர். இந்த இரண்டு வீரர்களும் அவர்களது கடைசி ஒன்பது டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் அடிக்கவில்லை. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் கில் சதம் அடித்துள்ளார்.
This innings by Shubman Gill was full of skill!
Congratulations on a well timed 100!#INDvENG pic.twitter.com/rmMGE6G2wA
— Sachin Tendulkar (@sachin_rt) February 4, 2024
பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு, காயம் காரணாமாக விலகி இருந்த கேஎல் ராகுல் அணிக்கு திரும்புவார். இதனால் இந்த இரண்டு வீரர்களில் ஒருவர் அணியில் இருந்து வெளியேற்றப்படலாம். மேலும், ரஞ்சி வீரர் சர்பராஸ் கான் அவரது வாய்ப்பிற்காக காத்து கொண்டு இருக்கிறார். இதன் காரணமாக ஷுப்மான் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மீதான அழுத்தம் அதிகமாகி உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் இரண்டாவது டெஸ்டில் விளையாடி வரும் முகேஷ் குமார் ரன்களை வாரி வழங்கி வருகிறார். அவருக்கு பதிலாக நான்காவது ஸ்பின்னர் உடன் விளையாடி இருக்கலாம் என்று ரோஹித் மற்றும் ராகுல் டிராவிட் எண்ணி வருகின்றனர்.
மேலும், மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான மீதலுள்ள டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறி ஆகி உள்ளது. கணுக்கால் சிகிச்சைக்காக தற்போது ஷமி இங்கிலாந்தில் உள்ளார். எனவே இந்த தொடரில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை. இதற்கிடையில், ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் போது தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட ஜடேஜா, தற்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள தேசிய அகாடமியில் உள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவடைந்ததைத் தொடர்ந்து அடுத்த வாரம் மீதுள்ள போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்.