Cancer-causing chemical compound in cotton candy | பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலப்பு :புதுச்சேரியில் கண்டுபிடிப்பு

புதுச்சேரி:வேலை தேடி புதுச்சேரி வந்துள்ள வட மாநில தொழிலாளர்கள் சிலர், புதுச்சேரி கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் பஞ்சு மிட்டாய் தயார் செய்து விற்கின்றனர்.

பிங்க், ஊதா, மஞ்சள் என பல வண்ணத்தில் பஞ்சு மிட்டாய்களை விற்பதால் குழந்தைகள் சிறுவர்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள், அடர் ரோஸ் கலரில் இருந்ததால் உணவு பாதுகாப்பு துறைக்கு சந்தேகம் வலுத்தது. அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கோரிமேடு பகுதியில் பஞ்சுமிட்டாய் விற்ற வட மாநில தொழிலாளியை பிடித்து பஞ்சுமிட்டாயை வாங்கி ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர்.

அப்போது பஞ்சுமிட்டாயில் தடை செய்யப்பட்ட’ரோடமின் பி’ என்ற விஷ நிறமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறமி ஊதுவத்தி குச்சியின் கடைசி பகுதியில் நிறமூட்ட பயன்படுத்தப்படுவது என்பதும், இவை தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் விஷத்தன்மை கொண்ட நிறம்,மனிதர்கள் சாப்பிட உகந்தது இல்லை என கண்டறிந்தனர்.

‘ரோடமின் பி’ ரசாயனம் கலந்த பஞ்சுமிட்டாய் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் இந்த நிறமிகள்குறைந்த விலைக்கு கிடைப்பதால் வடமாநில தொழிலாளர்கள் வாங்கி, பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

பிடிப்பட்ட உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சதிஷ்பாபு முகரியா 21; என்பவரிடம் இருந்து பஞ்சுமிட்டாய்கள் பறிமுதல் செய்து கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சதிஷ்பாபு முகரியாபோன்று 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பது தெரியவந்தது. பஞ்சுமிட்டாய் விற்ற சதிஷ்பாபு முகரியா மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ரோஸ் கலர் பஞ்சுமிட்டாய் வாங்கி தராதீர்கள்

உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் கூறுகையில், ‘பஞ்சுமிட்டாய்களை சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட ‘ரோடமின் பி’ என்ற விஷ நிறமி இருப்பது தெரியவந்தது. இது புற்றுநோயை உருவாக்கும் விஷம். ஊதுபத்தியின் கடைசி பகுதியில் நிறம் ஏற்ற பயன்படுத்தும், தொழிற்சாலை டை. இதை உட்கொண்டால் கல்லீரல் பாதிக்கப்பட்டு. புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

பொதுமக்கள் குழந்தைகளுக்கு ரோஸ் கலரில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை வாங்கி தராதீர்கள். பஞ்சுமிட்டாய் விற்ற வாலிபர் பிடித்து போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.