புதுடெல்லி: இந்திய எல்லையை ஒட்டி வாழும் மியான்மர் மக்கள், சுதந்திரமாக இந்தியாவுக்குள் வருவதற்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியா – மியான்மர் இடையே இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த சுதந்திரமாக இயங்குவதற்கான அனுமதி (Free Movement Regime) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மத ரீதியிலான மக்கள் தொகை மாற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மியான்மர் குடிமக்கள் விசா இன்றி இந்தியாவுக்குள் வருவதை முடிவுக்குக் கொண்டு வர இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதால், சுதந்திரமாக இயங்குவதற்கான அனுமதியை உடனடியாக நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: மியான்மரில் இருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் பெருமளவில் இந்தியாவுக்குள் ஊடுருவி இந்திய குடியுரிமையைப் பெறுவதாகவும், இதனால், வடகிழக்கு மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகரித்து வருவதாகவும் சர்ச்சை உள்ளது. இந்திய-மியான்மர் எல்லையில் மக்கள் சுதந்திரமாக இடம்பெயர்வதை அனுமதிக்கும் நடைமுறையை ரத்து செய்யுமாறு மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் மத்திய உள்துறை அமைச்சகத்தை வலியுறுத்தி வந்தார்.
மேலும், எல்லையில் கம்பி வேலியை போட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மணிப்பூரில் ஏற்பட்டுள்ள இன வன்முறைக்கு எல்லை தாண்டி வரும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதுதான் காரணம் என்றும் பைரன் சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை: இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான சுதந்திர நடமாட்டம் 1970-களில் இருந்து இருந்துவருகிறது. இதன் கீழ் எல்லையின் இருபுறமும் 16 கிமீ தொலைவில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள், பார்டர் பாஸ் பெற்று எல்லையை கடக்க முடியும். இவ்வாறு பெறப்படும் பாஸ், ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். மேலும், எல்லையை கடந்து வரும்போது இரண்டு வாரங்கள் வரை தங்கலாம். எனினும், கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து, மணிப்பூர் அரசாங்கம் 2020 முதல் இந்த எல்லை தாண்டும் நடமாட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.