புதுச்சேரி: “மத்திய அரசோடு இணக்கமாக இருக்கும் முதல்வர் ரங்கசாமி, ஏன் பாஜகவுடன் பேசி மாநில அந்தஸ்தை வாங்கவில்லை?” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பாஜக ஆளும் கட்சியாக இருக்கும் மாநிலங்களுக்கான நிதி முறையாக கொடுக்கப்படுகிறது. கேட்பதைவிட அதிகமான நிதி அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், எதிர்க்கட்சி மாநிலங்களை பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்படுகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக முதல்வர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் இருந்துகொண்டு சுய விளம்பரம் தேடி, ஆளும் அரசை முடக்கி முதல்வரை டம்மியாக்கிவிட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று புதுச்சேரி மாநிலத்தில் தேர்தலில் நிற்பதற்கான வேலையை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக செய்து வருகிறார். இப்போதும் அவர் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் நிற்பதற்கு அனைத்து வேலைகளையும் மும்முரமாக செய்து வருகின்றார்.
ஆனால், அவர் கடை விரித்தாலும் வாங்குவதற்கு யாரும் இல்லை. என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அவரை வேட்பாளராக போட எதிர்க்கின்றன. தனது ஆளுநர் பதவியை ராஜினமா செய்துவிட்டு அதன் பிறகு தேர்தலில் நிற்க இடம் கேட்க வேண்டும். ஆனால், ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு தனக்கு மக்களவை சீட் கிடைக்க வேண்டும் என்று வேலை செய்து கொண்டிருக்கிறார்.
புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கட்சி ஆண்டு விழாவில் புதுச்சேரி மாநிலத்தில் அவருடைய ஆட்சியில் பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி இருப்பதாகவும், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ரங்கசாமி தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மாநில அந்தஸ்து பெறுவதற்காகத் தான் கட்சி ஆரம்பித்தேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் 2011-ல் இருந்து 2024 வரை அதற்கான முயற்சிகளை அவர் செய்யவில்லை. மாநில அந்தஸ்து பெறுவதற்கு அவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று விளக்கமாக கூறவில்லை. பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து கேட்டேன் என்றார். எத்தனை முறை சந்தித்தார். எந்த ஆதாரங்களை அவர்களிடம் கொடுத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டார்.
மத்திய மோடி அரசோடு இணக்கமாக இருக்கும் ரங்கசாமி, புதுச்சேரி மக்களவை இடத்தை பாஜகவுக்கு தாரைவார்த்து கொடுக்கும் ரங்கசாமி, ஏன் பாஜகவுடன் பேசி மாநில அந்தஸ்தை வாங்கவில்லை. ரங்கசாமி மாநில அந்தஸ்து பெறுவோம் என்று அவர் வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே இருப்பார். புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்ப்பது, சிறப்பு நிதி பெறுவது எதுவும் நடைபெறவில்லை. ஆனால் கடந்த 5 ஆண்டுகால எங்களது ஆட்சியை குறை கூறுகிறார்.
கிரண்பேடியுடன் கை கோர்த்துக் கொண்டு எங்களது ஆட்சியை கவிழ்க்க வேலை பார்த்த ரங்கசாமி, இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு மாநில வளர்ச்சிக்காக எல்லா திட்டங்களையும் நிறைவேற்றிவிட்டதாக பொய்யான வாக்குறுதிகளை கூறுகிறார். ஊழல் செய்து லேப் டாப் வாங்கியுள்ளனர். எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. முதல்வர், அமைச்சர்கள் என எல்லோரும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். ரங்கசாமி ஆட்சியில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
ரவுடிகள் சிறையில் இருந்து வியாபாரிகள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் கேட்கின்றனர். வியாபாரிகளுக்கும், தொழிற்சாலை அதிபர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிதி ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் முக்கிய அம்சமாக வைத்து நாங்கள் மக்களவைத் தேர்தலை சந்திப்போம். வரும் மக்களவை தேர்தல் தான் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்கு முடிவு கட்டும். புதுச்சேரி மாநில மக்கள் இந்த ஆட்சியாளர்கள் மீது கோபமாக இருக்கின்றனர். இந்த ஆட்சியை எப்போது தூக்கிஎறிய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் செயல் படுகின்றனர்.
ஒட்டு மொத்தமாக என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும், மத்தியில் உள்ள மோடி அரசை தூக்கி எறிவதற்கும் வரும் மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுகின்றன வாய்ப்பு புதுச்சேரியில் இருக்கிறது. ஊழல்கள், மக்கள் விரோத செயல்பாடுகள், நலத் திட்டங்கள் முடக்கப்பட்டதன் காரணமாக மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். என்.ஆர். காங்கிரஸ் – பாஜக அரசின் ஊழல் சம்பந்தமான ஆதாரங்கள் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளியிடப்படும். நரேந்திர மோடி எந்தக் கூட்டணி கட்சியை வைத்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ய அவருக்கு என்ன தகுதி உள்ளது” என்றார் நாராயணசாமி.