சிவசேனா கட்சியைத் தொடர்ந்து உடைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சி. ‘கட்சி மற்றும் சின்னம் அஜித் பவாருக்குச் சொந்தம்’ என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்த சரத் பவார் தரப்புத் திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் நடப்பது என்ன?
மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சிவசேனா மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி. ஆட்சி அமைத்து சில மாதங்கள் கடந்த நிலையில், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து, தன் ஆதரவு எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் வெளியேறினார். 53 எம்எல்ஏக்கள் அஜித் பவாருக்கு ஆதரவும், 12 எம்எல்ஏக்கள் சரத் பவாருக்கு ஆதரவும் அளித்தனர்.
இதையடுத்து, சிவசேனா கட்சியை உடைத்து வெளியேற்றிய ஏக்நாத் சிண்டேவுடன் கூட்டணி அமைத்து, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. மேலும், தேசியவாத காங்கிரஸிலிருந்து வெளியேறிய அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியைக் கொடுத்து பாஜக அவரை தங்கள் கூட்டணிக்குள் இழுத்துக்கொண்டது.
ஏக்நாத் சிண்டே சிவசேனா கட்சியிலிருந்து வெளியேறியதன் பின்னணியில் பாஜக இருந்தது விமர்சிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து அஜித் பவாரும் தேசியவாத காங்கிரஸை உடைத்துக் கொண்டு வெளியேறியிருந்தார். இந்நிலையில், தற்போது, கட்சியும் அஜித் பவாருக்கு சொந்தம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, அஜித் பவாருக்குப் பதவி ஆசைக் காட்டி கட்சியை உடைக்க வைத்ததாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
முன்னிறுத்தப்பட்ட மகள்… முதுகில் குத்திய அண்ணன் மகன்! – சரத் பவரின் மூத்த சகோதரர் ஆனந்த் ராவ்வின் மகன் தான் இந்த அஜித் பவர். 2009-ம் ஆண்டு வரை, சரத் பவாருக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக அஜித் பவார் வருவார் என சொல்லப்பட்டது. ஆனால், சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே அரசியலில் களம் இறக்கப்பட்டார். அதன்பின் அவர் கை கட்சியில் ஓங்கியது. மகாராஷ்டிராவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தன் பேரன் ரோஹித் பவாரை சரத்குமார் களமிறக்கினார். தற்போது ரோஹித் பவாரும் எம்எல்ஏவாக இருக்கிறார். இப்படியாக, பேரன் மாநில அரசியலிலும், மகள் தேசிய அரசியலிலும் முன்னிறுத்தப்பட்டனர்.
இதனால் தனக்கான முக்கியத்துவம் கட்சியில் குறைந்து வருவதாகக் கருதத் தொடங்கினார் அஜித் பவார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறினார். பின், பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வர் பதவியைப் பெற்றார். ’தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தனது முக்கியத்துவத்தைக் குறைத்ததால் சமயம் பார்த்து சரத் பவார் முதுகில் குத்திவிட்டார்’ என அஜித் பவார் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ‘அஜித் பவார் தரப்பு அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி’ என தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டிருந்தது. இதில் தீர்ப்பளித்துள்ள தேர்தல் ஆணையம் அஜித் பவார்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றும், எனவே கட்சியின் பெயர் மற்றும் சின்னம் அவருக்குச் சொந்தம் என தெரிவித்துள்ளது.
மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத் சந்திர பவார் என்னும் பெயரைத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், மாற்று சின்னத்தையும் பரிந்துரைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அஜித் பவாருக்கு ஆதரவாக பாஜகவினரும், சரத் பவாருக்கு ஆதரவாக காங்கிரஸும் கருத்து தெரிவித்துள்ளது.
சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே “சட்டப் போராட்டம் நடத்துவோம். சிவசேனாவுக்கு நடந்தது தான் எங்களுக்கும் இன்று நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் சரியாகவே இருந்தது. கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார்தான். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்றவற்றை ஏவி கட்சி மற்றும் குடும்பத்தை பிரிக்கிறது இந்த அரசு. இது நம் நாட்டில் ட்ரெண்ட் ஆகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்கிறார் சரத் பவார் தரப்பு. இதில் ’தங்களின் கருத்து கேட்காமல் தீர்ப்பு அளிக்கக் கூடாது’ என அஜித் பவார் தரப்பு கேவிட் மனு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல், “ஆம், இது ஒரு பின்னடைவுதான். ஆனால் பின்னர் நாங்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்த்துப் போராடுவோம். எங்களுடன் சரத் பவார் இருக்கிறார். சரத் பவார் என்ற பெயரே எங்கள் அடையாளம் மற்றும் கட்சி” என்றார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சுழலில் தேசியவாத காங்கிரஸுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சட்டப் போராட்டத்தில் இவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வருமா என்பது கேள்வியாக எழுந்துள்ளது.