கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அப்போது அவர் இறைவனுக்கு நன்றி செலுத்துவது போன்ற ஒரு செய்கையைச் செய்ததாக, புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அப்போதே பதிலளித்த முகமது ஷமி, “நான் ஒரு முஸ்லீம், இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். நான் ஒரு பெருமைமிக்க இந்தியன். என்னைப் பொறுத்தவரை, நாடுதான் முதலில். இந்த விஷயங்கள் யாரையாவது தொந்தரவு செய்தால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன், நான் என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன், சமூக ஊடகங்களில் மட்டுமே வாழ்பவர்கள்தான் இது போன்ற சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள். அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
சஜ்தாவைப் பொறுத்தவரையில், நான் அதைச் செய்ய விரும்பினால், நான் செய்திருப்பேன். ஒவ்வொரு மதத்திலும், எதிர் மதத்தைச் சேர்ந்த நபரை விரும்பாத 5 – 10 பேரை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். எனவே, ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால், ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்னை… 1,000 முறைகூட சொல்லலாம். நான் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டுமென்றால் 1,000 முறை சொல்வேன்… இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது. எனவே, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.