தமிழ் சினிமாவிற்கு சர்ச்சைகள் புதிதல்ல. அதைப் போலவே கமல்ஹாசனுக்கும் சர்ச்சைகள் என்பது பழகிப்போன ஒன்று.
ஆனால் தமிழ் சினிமாவின் வரலாற்றிலும் சரி, கமல்ஹாசனின் திரைப் பயணத்திலும் சரி, அதிக அளவிலான சர்ச்சைகளை எதிர்கொண்ட திரைப்படம் ஒன்று உண்டெனில் அது ‘விஸ்வரூபம்’தான். படத்திற்குள் நிகழும் அரசியலை விடவும் அதிக அளவிலான அரசியலை படத்தின் வெளியே கமல் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அந்த அளவிற்கு பல் முனைத் தாக்குதல்கள் படத்தை வெளியிட முடியாதவாறு அணி வகுத்து நின்று கொண்டிருந்தன.

25, ஜனவரி 2013 அன்று உலகமெங்கிலும் வெளியிடுவதற்காகத் திட்டமிட்டிருந்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகவில்லை. வெளியிட முடியாதவாறான சூழல்கள் ஏற்பட்டிருந்தன மற்றும் ஏற்படுத்தப்பட்டன. இதனால் படத்தைப் பார்க்கும் ஆவல், வழக்கத்தை விடவும் அதிகமாகி, தமிழக ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கெல்லாம் பயணித்து படம் பார்த்த விநோதமெல்லாம் நடந்தது. பல்வேறு தடைகளுக்குப் பின்னர் ஒருவழியாக 7, பிப்ரவரி 2013 அன்று தமிழ்நாட்டில் படம் வெளியானது. அந்த வகையில் ‘விஸ்வரூபம், பாகம் ஒன்று’ வெளியாகி பதினோரு வருடங்களைக் கடந்திருக்கும் நிலையில் படத்தைப் பற்றியும், படத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த சர்ச்சைகளைப் பற்றியும் நினைவு கூருவோம்.
சர்ச்சைகளின் கூடாரமாகிப் போன விஸ்வரூபம்
கமலின் திரைப்படங்கள் சர்ச்சைகளை எதிர்கொள்வது புதிதான விஷயமில்லை. ‘விஸ்வரூபம்’ படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டதுமே பிரச்னையும் துவங்கி விட்டது. சமஸ்கிருத மொழியில் இருக்கும் தலைப்பை, தமிழ் மொழிக்கு மாற்றச் சொல்லி ‘இந்து மக்கள் கட்சி’ சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது. ஹாலிவுட்டில் நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களை தமிழ் சினிமாவில் தொலைநோக்குப் பார்வையுடன் முதலில் அறிமுகம் செய்யும் வழக்கமுள்ள கமல், அதே பாணியில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை, பார்வையாளர்களின் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் DTH வழியாக வெளியிடுவதற்கான அறிமுகத்தை ஆரம்பித்து வைக்க உத்தேசித்தார்.

ஆனால் திரையரங்கு உரிமையாளர் சங்கம் கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவித்ததோடு, ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை அரங்குகளில் திரையிட மாட்டோம்’ என்று அறிவித்தது. எனவே தனது திட்டத்தில் இருந்து கமல் பின்வாங்க நேர்ந்தது. ஆனால் இன்றைய தேதியில் ஓடிடி தளத்திலேயே திரைப்படங்களை நேரடியாக வெளியிடும் வழக்கம் நடைமுறையில் வந்துவிட்டது. இந்த வணிக சந்தர்ப்பத்தை கமல் அப்போதே செயல்படுத்த முயன்றிருக்கிறார்.
இதை விடவும் பெரிய தடையை கமல் எதிர்கொள்ள நேர்ந்தது. ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களின் மதவுணர்வுகளைப் புண்படுத்தும், இஸ்லாமியர்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகத் தெரிகிறது. நாங்கள் படத்தைப் பார்த்த பின்புதான் திரையிடலுக்கு அனுமதிக்க வேண்டும்’ என்று தமிழகத்திலுள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இந்திய தணிக்கைத் துறையால் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்தை, வெளியிடாமல் தடுக்கவோ, மறுதணிக்கைக்கு கட்டாயப்படுத்தவோ எந்தவொரு தனிநபருக்கும் அமைப்பிற்கும் உரிமையில்லை. படம் திரையிடப்பட்டால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்கிற மாதிரியான அச்சுறுத்தல்களும் எழுந்தன.

திரைப்படத்தின் உள்ளேயும் வெளியேயும் அரசியல்
நியாயமாகப் பார்த்தால் மாநில அரசு முன்நின்று இந்தப் பிரச்னையை ஜனநாயகப்பூர்வமாகவும் சட்டம் அனுமதிக்கும் வகையிலும் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அரசு, கமலுக்கு எதிராக நின்று கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது. ‘சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம்’ என்கிற அதே காரணத்தைக் கூறி படத்திற்குத் தடை விதித்தது. இதற்குப் பின்னால் சில காரணங்கள் சொல்லப்பட்டன. ‘வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும்’ என்று கமல் ஒரு மேடையில் பேசியது ஜெயலலிதாவின் கோபத்தைத் தூண்டியதாகச் சொல்லப்பட்டது. ஆளுங்கட்சி நடத்தும் தொலைக்காட்சி சானலுக்கு “விஸ்வரூபம்’ திரைப்படத்தை குறைந்த விலைக்குத் தருவதற்காக நெருக்கடி தரப்பட்ட நிலையில் கமல் அதை மறுத்ததால் ஜெயலலிதாவிற்கு எழுந்த கோபம் என்று இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது.
ஏறத்தாழ 96 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டிருந்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம், வெளியாகாமல் முடக்கப்படுகிற சூழல் கமலுக்கு மிகுந்த கோபத்தையும் பொருளாதார அழுத்தத்தையும் தந்தது. அரசின் தடையை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினார் கமல். ‘கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல், பிரச்னை ஏற்பட்டால், “நாட்டை விட்டு வெளியேறுவேன்” என்று அவர் பொதுவில் அறிவிக்கும் அளவிற்கு நிலைமையில் சூடு ஏறியது. “இந்தியாவில் மதச்சார்பற்ற இடத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், வேறு நாட்டில் அதைக் கண்டுபிடிப்பேன்” என்கிற கமலின் அறிவிப்பு, இந்திய திரைத்துறையில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தியது. ரஜினி முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை பல திரைக்கலைஞர்கள் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள். கருத்து சுதந்திரமும் படைப்புச் சுதந்திரமும் எந்த வகையிலும் முடக்கப்படக்கூடாது என்பதை பலரும் வற்புறுத்தினார்கள்.

‘இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காகத்தான் திரைப்படத்திற்கு தடை” என்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஜெ பேட்டி தந்தார். ஒரு திரைப்பட பிரச்சினைக்காக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பிரஸ் மீட் நடத்தியது அப்போது மிக ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய அமைப்பினர் படத்தைப் பார்த்த பிறகு, அதிலிருந்து ஆட்சேபகரமான ஏழு காட்சிகளை நீக்கச் சொன்ன பின்னர், அதை கமல் ஒப்புக் கொள்ள, ஒருவழியாக படம் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல பிரதேசங்களிலும் இந்தப் படத்திற்கு பிரச்சினைகள் முளைத்தன. படத்தில் வரும் ஒரு வசனத்திற்காக பிராமணர் சங்கம் ஆட்சேபணை செய்தது.
ஒருவகையில் இந்தத் தடைகளும் சர்ச்சைகளும் படத்திற்கு கூடுதல் விளம்பரமாக அமைந்தன எனலாம். ‘அப்படி என்னதான் இருக்கிறது?” என்கிற ஆவலில் படத்தைப் பார்த்தவர்கள்தான் அதிகம். எனவே படத்தின் வசூல் முதலீட்டின் அளவிற்கு மும்முடங்கு அதிகமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது.
விஸ்வநாத் என்கிற விஸாமின் விஸ்வரூபம்
முன்னோடி முயற்சிகளாக அமையும் கமலின் சில திரைப்படங்கள், காலதாமதமாகத்தான் புரிந்து கொள்ளப்படும், கொண்டாடப்படும் என்றொரு பொதுவான கருத்து ரசிகர்களிடையே உலவுவது உண்டு. ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தையும் அந்த வகையில் சேர்க்கலாம். இதுவொரு ஜனரஞ்சகமான திரைப்படம்தான் என்றாலும் முதன்முறை பார்க்கிற போது இதில் வெளிப்படும் பல நுட்பமான அம்சங்களை கண்டு கொள்வது சிரமமானது. அடுத்தடுத்த முறைகளில் பார்க்கும் போதுதான் பல நுட்பமான விஷயங்கள் மெல்ல மெல்ல அவிழ்ந்து பிரமிப்பை ஏற்படுத்தும்.
விஸ்வநாத் என்கிற விஸாம் அஹமத் கஷ்மீரி, தமிழ் பேசும் தாய்க்கும் கஷ்மீரிய முஸ்லிம் தந்தைக்கும் பிறந்தவர். இந்தியாவின் ‘ரா’ அமைப்பைச் சேர்ந்த உளவாளியான இவர், இந்திய ராணுவத்தால் தேடப்படும் குற்றவாளி என்கிற போர்வையில் ஆப்கானிஸ்தானில் ஊடுருவுகிறார். ‘தமிழ் பேசும் ஜிஹாதி மிக அபூர்வம்’ என்கிற ஓமர், ‘அல் கொய்தா’ அமைப்பிற்கு பயிற்சி தருவதற்காக விஸாமை அழைத்துச் செல்கிறார். நேட்டோ படைகளின் தாக்குதல் காரணமாக ஓமரும் விஸாமும் பிரிய நேர்கிறது. இவர்களின் சந்திப்பு மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நியூயார்க்கில் நிகழ்கிறது.

‘விஸ்வநாத்’ என்கிற அடையாளத்தில் கதக் நடன ஆசிரியராக அங்கு செயல்படுகிறார் விஸாம். ஓமர் தலைமையில் நியூயார்க் நகரத்தில் நடக்கவிருக்கும் நாசவேலைகளை விஸாம் தன் குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக முறியடிக்கிறார். ஓமர் இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் சூழலில் விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் நிறைவுறுகிறது. அடுத்த பாகம் இந்தியச் சூழலில் நடக்கிறது.
முன்னும் பின்னுமாக நகரும் ‘விஸ்வரூபம்’ படத்தின் திரைக்கதை அட்டகாசமாக எழுதப்பட்டுள்ளது. காட்சிகளின் பிரமாண்டமும் வசனங்களில் உள்ள கூர்மையும் ரசிக்கப்படுகிற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ‘விஸ்வநாத்’ என்கிற பெயரில், பெண்மை மிளிரும் நடனக்கலைஞராக கமல் தோன்றும் அறிமுகமே அற்புதமான காட்சியாக அமைந்திருக்கிறது. நடனக்காட்சியிலும் சரி, தொலைபேசி அழைப்பிற்கு துள்ளி தாவிச் சென்று நளினமாக போனை எடுத்து ‘தி இஸ்.. மிஸஸ் அண்ட் மிஸ்டர் விஸ்வநாத் ரெஸிடென்ஸ்” என்கிற காட்சியிலும் சரி, ‘என் பேரு தௌபீக்’ என்று சொல்லி விட்டு கண்ணைச் சிமிட்டும் காட்சியிலும் சரி, கமலின் பெண்மை கலந்த முகபாவங்கள் நடிப்பிற்கான இலக்கணம் எனலாம்.
இளம் வயதில் கமல் பரத நாட்டியம் பயின்ற போது தன்னிச்சையாகவே பெண்மையின் நளினங்கள் வெளிப்பட ஆரம்பிக்க, பயந்து போன கமல், கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்து தன் உடலை திடகாத்திரமாக ஆக்கிக் கொண்டதாகச் சொல்வார்கள். முதிராத திரைப்பட ரசிகர்கள், தங்களின் அபிமான நடிகரை உயர்த்திக் காட்டுவதற்காக எதிர் தரப்பு நடிகரை மலினப்படுத்தி பேசுவதுண்டு. அந்த வகையில் ரஜினி ரசிகர்கள், கமலின் ஆண்மை அடையாளத்தை மறுத்து கேலி பேசுவதுண்டு. மிகையான ஆண்மையும் வீரமும் வெளிப்படுவதுதான் ஹீரோக்களின் அடையாளமே. ஆனால் ஒரு நல்ல நடிகன் இவ்வாறான மரபுகளை மீறவே முயற்சிப்பான். அந்த வகையில் பெண்மை மிளிரும் அங்க அசைவுகளையும் உடல்மொழியையும் கமல் நிகழ்த்திக் காட்டியது அவர் ஒரு மகத்தான கலைஞன் என்பதற்கான சாட்சியம்.

பெண்மை மிளிரும் கையாலாகாத நபராக ‘விஸ்வநாத்’ பாத்திரத்தை உருவாக்கியது ஒரு நல்ல உத்தி. ஏனெனில் ‘என்னய்யா.. இந்தாளு சொதப்புறான்’ என்று அவரைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அதிரடியான காட்சியின் மூலம் அவருடைய பின்னணி தெரியவருவது, எந்தவொரு பார்வையாளனுக்கும் மயிர்க்கூச்செறியும் காட்சியாக இருக்கும்.
மயிர்க்கூச்செறிய வைக்கும் ‘அந்தக்’ காட்சி
‘சாவறதுக்கு முன்னாடி கடைசியா ஒருமுறை பிரார்த்தனை பண்ணிக்கறேன். கையை அவுத்து விடுங்கோ’ என்று கண்ணீருடன் இறைஞ்சி விட்டு, அரபியில் உரத்த தொனியில் மொழியில் ஓதி விட்டு, தனது வலது காலை நீட்டி பின்னால் நிற்பவனின் காலில் உதைத்து அவனை விழச் செய்து, விழுபவனின் கழுத்தை மிதித்து, அப்படியே எகிறிப் பாய்ந்து, எதிரே வருபவனின் முகத்தில் காலால் வெடித்து… என்னவொரு காட்சி?! மின்னல் வேகத்தில் முடிந்து விடும் இந்த சாசகத்தை, ஒரு நீர் சொட்டுக்கும் அடுத்த துளி சொட்டுவதற்கும் இடைவெளியில் துரித கதியில் நிகழ்ந்து விடுவதாக உணர்த்தியிருப்பது ஒரு நல்ல ‘டச்’. ‘என்ன நடந்தது?” என்கிற திகைப்புடன் பூஜா குமார், நினைத்துப் பார்ப்பதின் மூலம் சண்டையின் விஸ்தீரணத்தை ஸ்லோ மோஷனில் காட்டியதும் நல்ல உத்தி. ‘எவன் என்று நினைத்தாய்?’ என்று பின்னணியில் ஒலிக்கும் பாடல் வரிகளும் அட்டகாசமான பின்னணி இசையும் அதன் ஆக்ரோஷமான சண்டை வடிவமைப்பும் இந்தக் காட்சியை உண்மையிலேயே ஒரு ‘விஸ்வரூப’ தரிசனமாக காட்டியது.

தாலிபன் இயக்கத்திடம் சிக்கிக் கொண்டு பெண்களும், மூளைச் சலவை செய்யப்படும் இளம் போராளிகளும் படும் அவதியைக் காட்டிய விதம் ஒவ்வொன்றும் கவிதை கணம் எனலாம். குறிப்பாக மறுநாளில் மனித வெடிகுண்டாக மாறி உயிர்த்தியாகம் செய்யப்போகும் ‘மம்மு’ என்கிற வளரிளம் சிறுவன், ‘என்னையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டு’ என்று கமலிடம் கேட்பதும், குழந்தைத்தன்மை மாறாத உணர்வோடு அவன் ஊஞ்சலில் ஆனந்தமாக ஆடுவதும் அற்புதமான காட்சி மட்டுல்ல, மனதை பதைபதைக்க வைக்கும் காட்சியும் கூட. ஆங்கில மொழி, ஆங்கில மருத்துவம், ஆங்கிலப் பெண் என்று அனைத்தையும் மூர்க்கமாக வெறுக்கும் ஓமர், மருத்துவராக விரும்பும் தன் மகனிடம் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் தந்த அடையாளம் காண பயிற்சியளித்து அதில் அவன் தேர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்வது, மூளைச்சலவையின் மூலம் ஜிஹாதிகளாக மாற்றப்படும் சிறுவர்கள் குறித்த அவலத்தை வெளிப்படுத்துகிறது.
பயங்கரவாதிக்குள் உறைந்திருக்கும் மனிதம்
அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலில் தன் குடும்பம் கொல்லப்பட்டதை அறியும் ஓமர், பயங்கரவாத மூர்க்கங்கள் மங்கி நெகிழ்வான மனநிலைக்கு தற்காலிகமாகச் செல்கிறான். “ஜலாலை இங்கிலாந்திற்கு அனுப்பி இன்ஜினியரிங் படிக்க வைத்திருப்பேனே.. நாசிரை அவன் விரும்பியபடி டாக்டராக்கி இருப்பேனே’ என்று ஓமர் புலம்பும் காட்சியில் பயங்கரவாதிகளிடம் உறைந்துள்ள ஆழ்மன விருப்பங்களும் மெல்லுணர்ச்சிகளும் சராசரி நபர்களின் கேவலும் வெளிப்படும் காட்சியாக அமைந்துள்ளது.
தாலிபன்களால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கர்களை மீட்பதற்காக நேட்டோ படை ஒரு வான்வெளித் தாக்குதலை நடத்துகிறது. அந்த இடத்தை ஓமரும் விஸாமும் பார்வையிடுகிறார்கள். படத்தின் முக்கியமான காட்சிகளுள் இதுவும் ஒன்று. அதில் அப்பாவி பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள். ரத்தக் காயங்களுடன் கையை உயர்த்திப் பரிதாபமாக வேண்டிய படி ஒரு பெரியவர் கடந்து செல்கிறார். இறந்து கிடக்கும் சிறுவனின் கையில் துப்பாக்கி இருக்கிறது. ஓமரால் துரத்தியடிக்கப்பட்ட ஆங்கில பெண் மருத்துவர், இறக்கும் தறுவாயிலும் தன் கையிலுள்ள ஸ்டெதஸ்கோப்பை இறுக்கமாகப் பிடித்திருக்கிறார்.

ஒரு முதிய பெண்மணி இவர்களைச் சபிக்கிறார். “முதல்ல பிரிட்டிஷ்காரனுங்க வந்தானுங்க. அப்புறம் ரஷ்யனுங்க. வந்தானுங்க. பிறகு. தாலிபானுங்க.. அமெரிக்கனுங்க. இப்ப நீங்க” என்று அந்தப் பெண்மணி கரித்துக் கொட்டும் சிறிய வசனத்திற்குள் ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த வரலாறே சுருக்கமாக அடங்கி விடுகிறது. “இந்த ஆம்பளைங்களே முன்னாடி வால் வைச்ச குரங்குங்கதான்” என்று அந்தப் பெண்ணிடம் வெளிப்படும் காட்டமான கோபத்திலும் கூர்மையான நகைச்சுவை மின்னுகிறது.
“எங்க சாமிக்கு நாலு கை இருக்கும்” என்று நிருபமா சொல்ல, “நாலு கை இருக்குமா.. அப்படின்னா எப்படி சிலுவைல அறைவீங்க?” என்று அமெரிக்கப் பெண் காவல் அதிகாரி நையாண்டியாக கேட்க. “நாங்க சிலுவைல அறைய மாட்டோம். கடல்ல மூழ்கடிச்சுடுவோம்” என்று நிருபமா சொல்லும் பதில் முதற்கொண்டு பல காட்சிகளில் அட்டகாசமான நகைச்சுவை பதிவாகியிருக்கிறது. Auro-3D ஒலி நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்திய திரைப்படம் என்கிற வகையில் விஸ்வரூபம் படத்தில் பல தொழில்நுட்பங்கள் திறமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘Am a hero and villain’ என்று சொன்னபடி அமெரிக்க கரன்ஸிகளை விஸாம் காற்றில் பறக்க விடும் காட்சி உறைந்து போய், பின்னணிக் காட்சிகளுக்கு நகர்வது முதல் பல அற்புதமான அசைவுகள் இதில் உள்ளன.
விஸ்வரூபம் – அமெரிக்கச் சார்பாகிப் போன சாபமா?
அட்டகாசமான திரைக்கதை, சிறந்த தொழில்நுட்பம், கூர்மையான வசனங்கள், காட்சிகள் என்று பல சிறப்பு அம்சங்களை இந்தப் படம் கொண்டிருந்தாலும் ஆட்சேபகரமான விஷயங்களும் நிறைய இருக்கின்றன. ‘நான் கெட்ட முஸ்லிம்களைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன். எனவே நல்ல முஸ்லிம்கள் இதைப் பாராட்டுவார்கள். பிரியாணி தருவார்கள்’ என்பது போல் பட வெளியீட்டிற்கு முன்னால் கமல் சொன்னார். தாலிபன்களின் பழமைவாதக் காட்டுமிராண்டித்தனங்களை யதார்த்தத்திற்கு மிக அருகில் சென்று பதிவாக்கியதெல்லாம் சரி. ஆனால் போராளிகள் நாசவேலையை நிகழ்த்துவதற்கு முன்னால் தொழுகை செய்வது, குரான் வசனங்கள் பின்னணியில் ஒலிப்பது, மிகவும் கொடூரர்களாக சித்தரிப்பது போன்றவை மீண்டும் மீண்டும் வரும் போது அந்தக் காட்சிகள் ஒரு இந்தியப் பார்வையாளனின் மனநிலையில் எந்த மாதிரியாகப் பதியும்?

உடைந்த பாகங்களாக இருந்த போதும் சரி, சுதந்திரத்திற்குப் பிறகு இழுத்துக் கட்டப்பட்ட பொட்டலமான தேசமாக ஆன போதும் சரி, இந்து – முஸ்லிம் பிரச்சினை என்பது எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் அரசியல் பிரச்னையாகவே இந்தியாவில் நீடித்துக் கொண்டிருக்கிறது. மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளும் இந்தப் பிரச்னையை இன்னமும் எண்ணைய் ஊற்றி நெருப்பு வைத்து வளர்த்துக் கொண்டிருக்கின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு இந்தப் பிரச்னையின் கூர்மை அதிகமாகியிருக்கிறது. திரைப்படங்களில் பயங்கரவாதிகளாகவும் கடத்தல்காரர்களாகவும் சமூகவிரோதிகளாகவும் இஸ்லாமியர்கள் சி்த்தரிக்கப்படும் போக்கு உலகம் முழுக்கவே அதிகமாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தான், நியூயார்க் என்று இந்திய மண்ணில் காட்சிகள் காட்டப்படாத காட்சிகள் என்றாலும் தொழுகை, குரான் போன்ற மத அம்சங்களும் பயங்கரவாதமும் இணைக்கோடுகளாக காட்டப்படும் போது அவை ஒரு வெறுப்பு பிரசாரம் போலத்தான் ஒரு சராசரி பார்வையாளனின் மனதில் பதியும். இந்தப் பொறுப்புணர்ச்சியோடு கமல் காட்சிகளை அமைத்திருக்கலாம்.
ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு நிகராக தமிழ் சினிமாவை உருவாக்குகிறவர் என்று கமல்ஹாசனை பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தை ‘ஹாலிவுட்’ படமாகவே கமல் உருவாக்கி விட்டாரோ என்று தோன்றுகிறது. அமெரி க்க வெளியுறவுத்துறையின் பிரசாரப்படம் போல் இருக்கிறது என்று எழுகிற குற்றச்சாட்டுகளை அத்தனை எளிதில் நிராகரிக்க முடியாது. அமெரிக்கச் சார்பிலான படங்கள் ஆஸ்கர் விருதுகளை எளிதில் வெல்லும் என்கிற ரீதியில் கமலின் கணக்கு அமைந்ததா என்று தோன்றாமல் இல்லை. ‘கமலால் மட்டுமே ஆஸ்கர் விருதை வெல்ல முடியும்’ என்கிற பொதுவான ரசிகனின் நம்பிக்கையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று கமல் துணிந்து விட்டாரா?

அமெரிக்கத் திரைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு கற்பித எதிரி இருக்க வேண்டும். சோவியத் யூனியன் செயலாக இருந்தவரை, பனிப்போர் காலக்கட்டத்தில் ஹாலிவுட் திரைப்படங்களின் வில்லன்கள் ரஷ்யர்களாகத்தான் இருப்பார்கள். சோவித் யூனியன் சிதறுண்ட பிறகு, 9/11 பேரழிவிற்குப் பிறகு ஹாலிவுட் படங்களின் வில்லன்கள் இஸ்லாமியர்களாக மாறி விட்டார்கள். இதே பாதையில் கமல் பயணித்திருப்பது தற்செயலா அல்லது அதுதான் அஜெண்டாவா என்றெழுகிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
‘I believed in America’ என்று நிருபமா சொல்லும் வசனத்துடன்தான் படம் ஆரம்பிக்கிறது. சொர்க்கத்திற்குப் போகும் வழி மாதிரி அமெரிக்கா என்பது பல நடுத்தர இந்தியர்களின் கனவு. ‘அமெரிக்க ராணுவம் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள்’ என்று ஓமர் சொல்வது மாதிரியான ஒரு வசனம் வருகிறது. உலகின் பெரியண்ணனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உலக நாடுகளின் விவகாரங்களில் வம்படியாக மூக்கை நுழைக்கவும், மூன்றாம் உலகின் வளங்களைக் கொள்ளையடிக்கவும் அமெரிக்கா செய்யும் பல்வேறு நாசவேலைகளுக்கு இடையில் அமெரிக்க ராணுவத்தை புனிதப்படுத்தும் வசனத்தை எவ்வாறு புரிந்து கொள்வது? அந்த வகையில் ‘விஸ்வரூபம்’ திரைப்படம், அமெரிக்கச் சார்பு படைப்பாகவும் இயங்கியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

அமெரிக்கத் திரைப்படங்களின் ஹீரோக்கள்தான் பொதுவாக உலகையே காப்பாற்றுவதான பாவனையில் வலம் வருவார்கள். ஆனால் அமெரிக்காவையே காப்பாற்றும் ஹீரோவாக இதில் புதுமை செய்திருக்கிறார் கமல்ஹாசன். கமல் ஒரு சிறந்த நடிகர், சினிமாவின் நுட்பங்களை அறிந்த மகத்தான கலைஞர் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை. ஆனால் தான் உருவாக்கும் படைப்புகளில் சர்ச்சைக்குரிய அம்சங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டால் அவருடைய திரைப்படங்கள் மேலும் ஜொலிக்கும் என்பதற்கு ‘விஸ்வரூபம்’ ஒரு சிறந்த உதாரணம்.