சென்னை: “பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சிந்தனை மற்றும் மனிதாபிமான பயன்பாட்டினால், சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க உதவும்” என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தந்தை பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, அவரது மறைவுக்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கியதற்கு இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலும் உலக அளவிலும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்புப் பிரச்சினையைத் தீர்க்க அறிவியலை முன்னேற்றுவதற்கு அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பணிக்கு இது ஒரு பெரிய மரியாதை மற்றும் அங்கீகாரம். அவர் ஒரு நிறுவனத்தை உருவாக்கியவர் மற்றும் ஆயிரக்கணக்கான இளம் விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.
டாக்டர் சுவாமிநாதனின் வாழ்க்கை தன்னலமற்ற தன்மையையும் மனித குலத்துக்கான சேவையையும் உள்ளடக்கியது. சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் ஒரு கர்ம யோகியாகவும் இருந்தார். மேலும் அவர் தேடிய வெகுமதி கிராமப்புற மற்றும் பழங்குடி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் முகங்களில் மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சிந்தனை மற்றும் மனிதாபிமான பயன்பாட்டினால், சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க உதவும்” என்று அவர் கூறியுள்ளார்.