பிரபல திரைப்பட இயக்குநர் எம்.மணிகண்டன் வீட்டில் தேசிய விருதுக்கான பதக்கங்கள், ஒரு லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள் திருடு போன சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் இயக்குநர் மணிகண்டன். காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, குற்றமே தண்டனை, கடைசி விவசாயி போன்ற மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இயல்பான திரைபபடங்களை இயக்கியவர். காக்கா முட்டை, கடைசி விவசாயி படங்களுக்காக தேசிய விருது பெற்றவர்.
இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி சாலையில் எழில் நகரில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அடுத்த திரைப்பட பணிகளுக்காக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

அவருடைய கார் டிரைவர்கள் ஜெயக்குமார், நரேஷ்குமார் ஆகியோர் தினமும் வீட்டுக்கு வந்து நாய்க்கு உணவு வைப்பதை வழக்கமாகச் செய்துள்ளார்கள்.
அதுபோல் நேற்று முன்தினம் நாய்க்கு உணவு வைத்துவிட்டு சென்ற பின், நேற்று வழக்கம்போல மாலை 4 மணியளவில் உணவு வைக்க வந்த நரேஷ்குமார், வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீஸார், நடத்திய சோதனையில் வீட்டின் பிரோவில் இருந்த பொருட்கள் கலைக்கப்பட்டு கடைசி விவசாயி திரைப்படத்திற்காக பெற்ற இரு தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்கள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இத்தகவல் சென்னையில் உள்ள இயக்குநர் மணிகண்டனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர் வந்து பார்த்த பின்புதான் வேறு ஏதும் கொள்ளை போயுள்ளதா என்பது தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.