புதுடெல்லி: ராகுல் காந்திக்கு மற்றவர்களை மதிக்கத் தெரியவில்லை என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம், அக்கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நேற்று நீக்கப்பட்டார். ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி விடுத்த கோரிக்கைக்கு கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் வழங்கி உள்ளதாக கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம், “கட்சியில் இருந்து விடுவித்ததற்காக கட்சித் தலைமைக்கு நன்றி. ஆனால், எத்தகைய கட்சி விரோத நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டேன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.
என்னை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். மாறாக, 14 ஆண்டுகள் நீக்கி இருக்க வேண்டும். ஏனெனில், பகவான் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். நான் ராமரின் பெயரை உச்சரித்தது தவறா? அயோத்திக்கு சென்றது தவறா? பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்றது தவறா? கல்கி கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்ததுதவறா? எது கட்சி விரோத செயல்? எனது கேள்விகளுக்கு கட்சித் தலைமை பதில் அளிக்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் கட்சி விரோத செயல் என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
நான் காங்கிரஸ் கட்சியில் இணை காரணமாக இருந்தவர் ராஜேஷ் பைலட். அவர்தான் என்னை ராஜிவ் காந்தியை சந்திக்க வைத்தார். அப்போது, உயிர் உள்ளவரை காங்கிரஸ் கட்சியைவிட்டு விலக மாட்டேன் என நான் ராஜிவ் காந்தியிடம் கூறினேன். நான் எனது வாக்குறுதியை காப்பாற்றவே நான் தொடர்ந்து கட்சியில் இருந்தேன். கட்சி எடுத்த பல முடிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தது, சனாதன தர்மத்தை டெங்கு மலேரியா உடன் ஒப்பிட்ட திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது, முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்தது ஆகியவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தும் நான் எனது வாக்குறுதிக்காகவே தொடர்ந்து இருந்தேன்.
ராகுல் காந்திக்கு மற்றவர்களை மதிக்கத் தெரியவில்லை. ஜனநாயகத்துக்கு வலிமையான எதிர்க்கட்சி தேவை. ஆனால், பிரதமரை வெறுப்பதுதான் வலிமையான எதிர்க்கட்சிக்கு அழகா? துரதிருஷ்டவசமாக ராகுல் காந்தி பிரதமர் மோடியை வெறுக்கிறார். மோடி மீதான வெறுப்பு தற்போது நாட்டின் மீதான வெறுப்பாகவும் மாறி இருக்கிறது. தனது தாய்க்கும் சகோதரிக்கும் மரியாதை தராதவர் மற்றவர்களை எவ்வாறு மதிப்பார்? பிரியங்கா காந்தியும் அவமரியாதையாக நடத்தப்படுகிறார். அவர் ஏன் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்கவில்லை? ஏனெனில், அதற்கான உத்தரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்” என குறிப்பிட்டுள்ளார்.