'கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்…' பிசிசிஐ ஆணை – இஷான் கிஷன் என்ன செய்யப்போகிறார்?

BCCI Ishan Kishan: ரஞ்சி கோப்பை 2024 தொடர் நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குரூப் சுற்றில் இன்னும் ஒரே ஒரு சுற்று பாக்கியுள்ளது. அந்தந்த பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்து நாக்அவுட் சுற்றுக்கு தகுதிபெறும். 

பிசிசிஐ உள்ளூர் கிரிக்கெட் சார்ந்து ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதாவது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டும் என்றால், ரஞ்சி டிராபியில் கண்டிப்பாக விளையாடி ஃபெர்பார்ம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த முடிவு. இதனை பிசிசிஐ மற்றும் இந்திய சீனியர் ஆடவர் தேர்வுக்குழுவினரும் இணைந்து முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

ஐபிஎல் தொடருக்கு பயிற்சி

இது உள்ளூர் போட்டிகளில் நட்சத்திர வீரர்களையும் விளையாட வேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது. உதாரணத்திற்கு, சமீபத்தில் இஷான் கிஷன் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது, தொடர் போட்டிகளின் காரணமாக தனது மன சோர்வை போக்கிக்கொள்ளும் வகையில் ஓய்வில் இருக்க உள்ளதாக தொடரில் இருந்து விலகினார்.

அதன் பின் ரஞ்சி கோப்பை உள்பட எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் இஷான் கிஷன் விளையாடவில்லை. மாறாக, வரும் கோடை காலத்தில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் கடைசியா ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியாவுடன் குஜராத்தின் பரோடாவில் உள்ள ரிலையன்ஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுவது தெரியவந்தது. 

பிசிசிஐ திடீர் ஆணை

ஐபிஎல் தொடருக்காக சர்வதேச அளவிலான போட்டிகளை கைவிட்டு ஜனவரி மாதம் முதல் அதற்காகவே பயிற்சி எடுப்பதை பல வீரர்களும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுதான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ரஞ்சி கோப்பை விளையாடுவதை கட்டாயமாக்கும் நடைமுறைக்கு தள்ளியுள்ளதாக தெரிகிறது. 

தற்போது சர்வதேச சுற்றுப்பயணத்திலேயோ, தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் காரணமாக இருப்பவர்களையோ தவிர்த்து மற்ற உடற்தகுதி உள்ள அனைத்து வீரர்களும் தங்களின் உள்ளூர் அணிக்காக விளையாடிய ஆக வேண்டும் என பிசிசிஐ தற்போது கடும் கட்டுப்பாட்டை விதித்து வீரர்களுக்கு ஆணையை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிசிசிஐயின் இந்த ஆணையை அடுத்து இஷான் கிஷன், ரஞ்சி கோப்பையில் ஜார்க்கண்ட் அணிக்காக விளையாட அம்மாநிலத்தின் ஜம்ஷத்பூர் நகருக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வரும் பிப். 16ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடன், ஜார்க்கண்ட் மோத உள்ளது. பிசிசிஐயின் இந்த உத்தரவு இஷான் கிஷனுக்கு மட்டுமின்றி குர்னால் பாண்டியா, தீபக் சஹார், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கும் பொருந்தும் எனலாம்.     

மேலும் படிக்க | IND vs ENG: இந்திய அணிக்கு பெரிய பிரச்னை… இவரை சேர்க்காவிட்டால்… முழு விவரம்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.