மதுரை: மதுரை மாநகராட்சி உள்பட மதுரை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 4 டவுன் பஞ்சாயத்துகள், 316 கிராம பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ‘மாஸ்டர் பிளான்’ வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதனால், நகர்பகுதிகள் 147.97 சதுர கி.மீ., தொலைவுக்கு விரிவடைவதால் சென்னை, கோவை மாநகரங்களை போல் தொழில் வளமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு நகரத்துக்கும் அதன் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் 1971ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த காலத்தில் இந்த மாஸ்டர் பிளான் திட்டம், ஊட்டி, கொடைக்கானல் தவிர மற்ற நகரங்களில் தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை. அதனால், குடியிருப்பு பகுதிகள் காலப்போக்கில் வர்த்தகப்பகுதியாக மாறியதால் நகர்பகுதியில் சரக்கு வாகனங்கள் வந்து செல்வதால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பும், சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் கடந்த 1994ம் ஆண்டு 72 வார்டுகளில் ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் ஒவ்வொரு 5 முதல் 10 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறைப் பின்பற்றப்படாததால் மதுரை மாநகராட்சி இந்த திட்டத்தால் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. குடியிருப்பு பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தற்போது வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் பெருகிவிட்டதால் நகரப்பகுதியில் நீடிக்கும் போக்குரவத்து நெரிசலால் மக்கள் வசிக்க முடியாத பரிதாபம் ஏற்பட்டுள்ளது. அதனால், புறநகர் பகுதிகளில் வீட்டுமனைகளுக்கான ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டிப்பறக்கிறது. ஆனால், தொழில் வளம் பெருகவில்லை.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி உள்பட மாவட்டத்தில் உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 2 நகராட்சிகள், 4 டவுன் பஞ்சாயத்துகள், 316 கிராம பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து 147.97 சதுர கி.மீ., தொலைவுக்கு மாஸ்டர் பிளான் திட்டம் நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட வரைவு திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த திட்டத்தில் மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் முதன்மையாக சிறப்பு கவனம் கொடுத்து ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் உருவாக்கப்படுகிறது.
‘மாஸ்டர் பிளான்’ திட்டம் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டால் மதுரை மாநகராட்சி மட்டுமின்றி அருகில் உள்ள சிறிய நகரங்கள், ஊர்கள் அனைத்தும் பெரும் முன்னேற்றம் அடையும். மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கும். வர்த்தக அளவில் தென் மாவட்டங்களிலிருந்து எளிதில் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்புப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: மதுரை மாநகராட்சியில் 30 ஆண்டுக்குப் பிறகு, 100 வார்டுகளில் ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில், இடம்பெறும் மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துப் பகுதியில் எந்தெந்த பகுதிகள் வீட்டுமனைகள், வர்த்தக மனைகள் என்பது அடையாளப்படுத்தப்படும். அதுபோல், வீட்டுமனைகளும், வர்த்தகப்பகுதிகளும் இணைந்த (Mixer Zone) இடங்களும் உருவாக்கப்படும்.
சாலையோர வீட்டு மனைகள், வர்த்தகப்பகுதியாக அறிவிக்கப்படும். தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலை பகுதிகள் போன்றவை வகைப்படுத்தப்படும். இந்த மாற்றங்கள், சர்வே எண், தனியார் நிலமாக இருந்தால் அதன் உரிமையாளர்கள் பெயர், அரசு நிலமாக இருந்தால் அதன் நிலை வகைப்பாடுடன் குறிப்பிடப்படும். அதனால், பிற்காலத்தில் யாரும் வீட்டுமனைக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வணிகப் பகுதிகளாக மாற்ற முடியாது. இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு அருகில் உள்ள புறநகர் கிராம பகுதியில் புதிதாக கூடுதல் தொழிற்சாலைப் பகுதிகள் உருவாக்கப்படும்.
இதனால், கிராமப்புற படித்த, படிக்காத இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தற்போது தொழில்துறையை பொறுத்தவரையில் சென்னை, கோவைக்கு பிறகு மற்ற நகரங்கள் வளர்ச்சிப்பெறவில்லை. அதற்கு தொழில் நிறுவனங்கள் வருவதற்கான இடங்களை அரசால் கண்டுபிடித்துக் கொடுக்க முடியவில்லை. தற்போது மாஸ்டர் பிளான் திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கான இடமும் ஒதுக்கப்படுவதால் இந்த திட்டத்தால் மதுரையில் தொழில்வளம் வளர்ச்சிப்பெற வாய்ப்புள்ளது. இந்த மாஸ்டர் பிளானை செயல்படுத்துவதற்கு முன் பொதுமக்கள், தொழில் முனைவோர்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்படும், ’’ என்றனர்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமும், இதுபோல்தான் பெரிய எதிர்பார்ப்பை மதுரையில் ஏற்படுத்தியது. கடைசியில் அது நகர வளர்ச்சிக்கு கொஞ்சமும் உதவாமல் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி விரயமானது. அதுபோல், இந்த திட்டத்தை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கண்துடைப்புக்கு நிறைவேற்றாமல் பொறுப்பை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.