புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த சீனியர் எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் 57 வயது முதியவர் மற்றும் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் என இரு நபர்களை காவல் துறை கைது செய்துள்ளது. இதில் மேலும் யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சீனியர் எஸ்.பி கலைவாணன் தலைமையில் எஸ்.பி லட்சுமி சைஜன்யா, இன்ஸ்பெக்டர் கணேசன், சப்இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கவும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு அறிவுறுத்தல்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அத்தகைய நடவடிக்கையை காவல்துறை எடுக்கும்.
காவல்து றையை சேர்ந்த அதிகாரிகள் யாரேனும் குற்றச் செயலில் ஈடுபடுவோருடன் தொடர்பில் இருந்தால் அவர்கள் மீது உடனடியாக அரசு துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கும். சிறப்பு நீதிமன்றத்தை பொறுத்தவரையில் சட்டத்துறை தான் முடிவு செய்ய வேண்டும். சிறுமி கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது போக்சோ, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை உள்ளிட்ட என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுமோ, அந்தப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும்.
இந்த வழக்கை பொறுத்தவரையில் கைது செய்யப்பட்டவர்கள், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். அவ்வாறு முயலும்போது சிறுமி தடுக்க போராடியுள்ளார். இதில் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. தற்போதுதான் ஒத்துழைப்பு அளித்து உண்மையை சொல்ல ஆரம்பித்துள்ளனர். அதன் பிறகே நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். தொடர் விசாரணை செய்து மேலும் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கத்தான் தனிப்படையே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. காவல் துறை தொடர் நடவடிக்கையில்தான் ஈடுபட்டனர். மெத்தனமாக நடந்துகொள்ளவில்லை. கடந்த வாரம் கூட கடற்கரை சாலையில் குழந்தை கடத்தப்பட்டபோது காரைக்கால் வரை சென்று மீட்டு வந்தனர். ஆகவே, இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம்.
எதிர்கட்சியினர் பந்த் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இதனை அரசியலாக்க வேண்டாம். தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. நடவடிக்கை எடுக்கும்போது தேவையின்றி இதுபோன்ற நேரங்களில் அரசியலாக்காமல் அந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும்.
போதைப்பொருள் நடமாட்டம் குறித்து புகார் தெரிவிக்க பொதுமக்கள் யாரும் முன்வருவதில்லை. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிட்ட பிறகுதான் பேசுகின்றனர். காவல் துறையின் கவனத்துக்கு வரும்போது எல்லாவற்றையும் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கின்றோம், நடவடிக்கையும் எடுக்கின்றோம்.
இந்த அரசு வந்தபிறகு 300-க்கும் மேற்பட்ட கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிலோ கணக்கில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பிடித்துள்ளோம். கஞ்சா நடமாட்டம் இருப்பது தெரியவந்தால் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் முன்வந்து காவல் துறைக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் அளிக்கும் நபவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. வந்த பிறகு முழு விவரங்களும் தெரிவிக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி: சிறுமியின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவியர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிறுமி பயன்படுத்திய பள்ளி புத்தகங்கள், நோட்டுகள், பைகள், விளையாட்டுப் பொருள்களை வைத்து அதற்கு விளக்கேற்றி உறவினர்கள் துக்கத்தில் இருந்தனர். சிறுமியின் உடல் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வைத்திக்குப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று பெற்றோர் தெரிவித்தனர்.
முன்னதாக, “புதுச்சேரி – முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் பெண் எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தப்படும். வேகமாக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து ஒரு வாரத்துக்குள் நீதி கிடைக்க வழி செய்வேன்” என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > “ஒரு வாரத்துக்குள் நீதி கிடைக்க நடவடிக்கை” – புதுச்சேரி சிறுமிக்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர் தமிழிசை உறுதி