பெங்களூரு, பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு புரூக்பீல்டில் உள்ள பிரபலமான, ‘ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில், கடந்த 1ம் தேதி குண்டு வெடித்தது. இதில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு விசாரணையை கையில் எடுத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், 500க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், மர்ம நபர் குண்டு வைத்து விட்டு, பி.எம்.டி.சி., பஸ்சில் பயணம் செய்த வீடியோவும்; துமகூரு வழியாக பல்லாரி சென்ற வீடியோவும் வெளியானது.
பல்லாரியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அங்கு கிடைத்த தகவல் அடிப்படையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதி மினாஜ் சுலைமான், 20, என்பவரை இரண்டு நாட்களுக்கு முன், தங்கள் காவலில் எடுத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சிறையில் இருந்தபடியே பயங்கரவாத செயலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது உறுதி செய்யப்பட்டது.
அவரது தகவல்படி, சிறையில் முன்பு அவருடன் இருந்த பல்லாரியின் சையத் சமீர், 19, மும்பையின் அனாஸ் இக்பால் ஷேக், 23, டில்லியின் சயான் ரகுமான் உசேன், 26 ஆகிய மூன்று பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நான்கு பேருமே, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாக, 2023 டிசம்பர் 18ல், பல்லாரியில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில் மினாஜ் சுலைமான் தவிர, மற்றவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கூடுதல் விசாரணைக்காக, என்.ஐ.ஏ., அதிகாரிகள், நான்கு பேரையும் பல்லாரிக்கு அழைத்து சென்றுள்ளனர். விரைவில் குண்டு வைத்த மர்ம நபர் சிக்கி விடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், குண்டு வெடித்த ராமேஸ்வரம் கபே உணவகம் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. நேற்று உணவகத்தை சுத்தப்படுத்தி, சிறப்பு ஹோமம், பூஜைகள் செய்யப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்