ஜக்டியால்: “நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பாஜகவை எதிர்த்து போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம்” என்று ராகுல் காந்தி என்று ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் இன்று (திங்கள்கிழமை) நடந்த பொதுக்கூட்டத்தில் இதற்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி “நாங்கள் சக்தியை வணங்குகிறோம். அவர்கள் சக்தியை அழிக்க சபதம் ஏற்கிறார்கள். அந்த சவாலை நான் ஏற்கிறேன். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்த பயணம் மும்பையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. பின்னர் விழாவில் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணமே வாக்குப்பதிவு இயந்திரம்தான். எங்களிடம் அந்த இயந்திரங்களை காண்பிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். ஆனால், அவர்கள் ஏன் அதனை செய்யவில்லை? ஏனென்றால், பிரதமர் மோடியின் ஆன்மா அதில்தான் உள்ளது.
நாங்கள் தனியொரு நபரான மோடி அல்லது பாஜகவை எதிர்த்து போராடவில்லை. சக்தியை எதிர்த்து போராடுகிறோம். இந்த சக்தி, வாக்குப்பதிவு இயந்திரம், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வசம் உள்ளது” என்று ராகுல் பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் வடிவம். ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மகளும் சக்தியின் வடிவம். நான் அந்த வடிவத்தை வணங்குகிறேன். இந்த தேசம் சந்திரயான் வெற்றியை சிவசக்திக்கு அர்ப்பணித்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் சக்தியை அழிப்பது பற்றி பேசுகின்றன.
நேற்று சிவாஜி பூங்காவில் திரண்ட இண்டி கூட்டணிக் கட்சிகள் தங்களின் இலக்கு சக்தியை அழிப்பது எனப் பேசியுள்ளன. தாய்மார்களே, சகோதரிகளே நான் உங்கள் அனைவரையும் சக்தியாக பாவிக்கிறேன். நான் பாரத மாதாவை பூஜிப்பவன். இருப்பினும் இண்டியா கூட்டணி ‘சக்தியை’ அழிப்போம் என்று சூளுரைத்துள்ளது. அந்த சவாலை நான் ஏற்கிறேன்.
இந்த தேசத்தின் தாய்மார்களை, சகோதரிகளைப் பாதுகாக்க நான் எனது உயிரையும் தியாகம் செய்வேன். இந்த தேசம் முழுவதும் வரும் தேர்தலில் பாஜகவுக்கு 400 சீட்களுக்கும் மேல் கிடைக்கும் என்று பேசுகிறது. நாம் வெல்வோம்” என்றார்.
ராகுல் விளக்கம்: இந்நிலையில், பிரதமர் மோடியின் கருத்து குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “மோடி அவர்களுக்கு எனது வார்த்தைகளைப் பிடிக்காது. அவர் எப்போது என் வார்த்தைகளைத் திரிக்க முயற்சிப்பார். அவருக்கு நான் ஓர் ஆழமான உண்மையை உரைத்துள்ளேன் என்பது தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.