அமேசான் மழைக்காட்டில் மிகப்பெரிய பழங்கால டால்பின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் உள்ள அமேசான் மழைக்காட்டில் மிகப்பெரிய நதி டால்பின் புதைபடிவ மண்டை ஓட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெருவின் அமேசான் நதிகளில் தஞ்சம் அடைந்ததாகக் கருதப்படும் பெபனிஸ்டா யாகுருனா என்ற டால்பின் இனத்தில் மண்டை ஓடு என மதிப்பிடப்பட்டுள்ளது. அழிந்துபோன இனத்தைச் சேர்ந்த இந்த டால்பின் 3.5 மீட்டர் நீளம் வரை இருந்திருக்கும் என்றும், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நதி டால்பின்களில் இது மிகப்பெரிய டால்பின் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய இனத்தின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலகின் எஞ்சியிருக்கும் நதி டால்பின்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்துகிறது. இந்த நதி டால்பின்கள் அடுத்த 20 முதல் 40 ஆண்டுகளில் இதேபோன்ற அழிவை சந்திக்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர் ஆல்டோ பெனிட்ஸ்-பாலோமினோ தனது ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள டால்பின் இனம், 24 மில்லியன் முதல் 16 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல்களில் பொதுவாகக் காணப்பட்ட டால்பின்களின் பிளாட்டானிஸ்டோய்டியா குடும்பத்தைச் சேர்ந்தது என்று ஆல்டோ பெனிட்ஸ்-பாலோமினோ தெரிவித்தார்.

இதேபோல் எஞ்சியிருக்கும் நதி டால்பின்கள், ஒரு காலத்தில் கடல்களில் வாழ்ந்த டால்பின் குழுக்களின் ஒரு பகுதி என்றும், அவை நன்னீர் ஆறுகளில் புதிய உணவு ஆதாரங்களை தேடி கடல்களை விட்டு வெளியேறியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

பெனிட்ஸ்-பாலோமினோ இளங்கலைப் பட்டதாரியாக இருந்தபோது 2018-ம் ஆண்டில் பெருவில் இந்த டால்பின் புதைபடிவத்தை கண்டுபிடித்தார். அவர் இப்போது சூரிச் பல்கலைக்கழகத்தின் பழங்காலவியல் துறையில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொரோனா பரவல் காரணமாக, நதி டால்பின் புதைபடிவம் குறித்த தனது ஆராய்ச்சி கட்டுரை தாமதமானது என்று அவர் தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.