தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு வெடித்து வருகிறது. அதில், பல பிரச்சினைகளுக்கு நீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு தீர்வை எட்டி வருகிறது. அதன்படி, தமிழக அரசின் முடிவுக்கு எதிர்த்த ஆளுநர், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் முடிவை மாற்றி யு-டர்ன் அடித்த நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
1. மசோதாக்களுக்கு ஓப்புதல் அளிக்காத ஆளுநர்! – கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதமாதப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளை சட்டவிரோதம் என அறிவிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் , “ 2020-ம் ஆண்டிலிருந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார். மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. அதேபோல், ‘தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிட கூடாது. ஆளுநரின் இந்த செயல் கவலையளிக்கிறது’ என நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடதக்கது.
2. அமைச்சர் பதவிப் பிரமாணத்துக்கு எதிர்ப்பு – சொத்துக் குவிப்பு வழக்கில், பொன்முடி தண்டனை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், எம்எல்ஏவாக பொன்முடி தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி, அதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். ஆனால், ஆளுநர் அந்த பரிந்துரையை நிராகரித்தார்.
இதனை எதிர்த்து அரசு வழக்குத் தொடர்ந்தது. அப்போது, மார்ச் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அவர் கூறுவது வினோதமாக இருக்கிறது. அவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார். ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி, எங்களுக்கும் கவலை அளிக்கிறது. ஆனால், அதை இந்த நீதிமன்றத்தில் நாங்கள் சத்தம்போட்டு கூற விரும்பவில்லை.
மனுதாரருக்கு மீண்டும் பதவிப் பிரமாணம் செய்துவைக்க மறுத்ததன் மூலம், உச்ச நீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார். அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாக பின்பற்றாவிட்டால், மாநில அரசு என்ன செய்யும்.அவருக்கு சட்டம் தெரியுமா, தெரியாதா. அவருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தகுந்த அறிவுரை கூற வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான கருத்துகளைப் பதிவு செய்ய நேரிடும். குறிப்பாக, உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்” எனக் கடுமை காட்டியது உச்ச நீதிமன்றம்.
பதவிப் பிரமாணத்துக்கு ஒருநாள் கெடு விதித்தது உச்ச நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மார்ச் 22-ம் தேதி பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.