‘இப்போ தொட்டுரும்…அப்போ தொட்டுரும்’ என்றிருந்த ஒரு பவுன் தங்கம் விலை ஒருவழியாக இன்று ரூ.50,000-த்தை தொட்டுவிட்டது. வரலாற்றிலேயே தங்கம் விலை ரூ.50,000-த்தை தொடுவது இதுவே முதல்முறையாகும்.
உலகம் முழுவதிலும் தங்கம் முக்கிய இடத்தை பெற்றிருந்தாலும், இந்தியர்களுக்கு தங்கம் எப்போதும் தனி ஸ்பெஷலானது. தங்கம் இல்லாமல் இந்தியர்களின் வீட்டில் எந்தவொரு பண்டிகை மற்றும் விசேஷமும் நடக்கவே நடக்காது. கல்யாணம், காதுக்குத்து, கோவில் விசேஷம் என எதுவாக இருந்தாலும் தங்கத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது.

இப்படிப்பட்ட தங்கம் நேற்று ஒரு கிராமுக்கு ரூ.6,215 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.49,720 ஆகவும் விற்பனை ஆனது. இன்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.35 உயர்ந்து ரூ.6,250 ஆகவும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.50,000 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
அடுத்தடுத்து முகூர்த்த நாள்கள் வரவிருக்கும் நிலையில் நிச்சயம் இந்த தங்கம் விலை உயர்வு மக்களிடம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. தங்கம் விலை தான் அதிகம் என்று பார்த்தால், வெள்ளியும் இன்று ஒரு கிராமுக்கு ரூ.80.50-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் என்றும், அமெரிக்க ஃபெடரல் வங்கி எடுக்கும் முடிவுகள், உலக நாடுகளுக்கு நடுவே நடக்கும் போர்கள், மத்திய வங்கிகள் தங்கம் வாங்கி குவிப்பது, நடக்கவிருக்கும் இந்திய பொது தேர்தல், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள், உலக நாடுகளின் தங்கத் தேவைகள் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.