தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரியில், பா.ஜ.க வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவருக்காக முதல்வர் ரங்கசாமி திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் ரங்கசாமி, “மத்தியிலும், புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. அடுத்ததும் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் வர இருக்கிறது. அதில் பிரதமராக மீண்டும் மோடிதான் பொறுப்பேற்க இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்புகள் எப்போதும் பொய்யாகாது. 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி பயணித்து வருகிறார்.

வல்லரசாக வேண்டும் என்று நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறார். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் பிரச்னைகளை தீர்க்க பிரதமர் மோடியை அழைக்கின்றன. அப்படியானால் எப்படிப்பட்ட பிரதமர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். மத்தியில் உள்ள ஆட்சியுடன் இணைந்த ஆட்சிதான் புதுச்சேரிக்கு தேவை. எதிர் தரப்பில் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கினார்கள். ஆனால் தற்போது அனைவரும் சிதறி விட்டனர். அந்த கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாகவே 100 எம்.பி-க்களுக்கும் கீழ்தான் கிடைப்பார்கள் என்று கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 40 எம்.பி-க்கள்தான் கிடைப்பார்கள். அதனால் அந்த கூட்டணியில் இருந்து வைத்திலிங்கம் வெற்றி பெற்று சென்றால், அவரால் என்ன செய்துவிட முடியும் ? நாடாளுமன்றத்திற்கு சென்று ஒரு ஓரமாக உட்கார்ந்துவிட்டு வரலாம்.
புதுச்சேரியில் நாம் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துகிறோம். நின்றுபோன இலவச லேப்டாப், சைக்கிள் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். எந்தவித அரசு உதவியையும் பெறாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தில், 60,000 பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்பு நிதி திட்டத்தில், 9,500 குழந்தைகளுக்கு வைப்பு நிதி செலுத்தியிருக்கிறோம். ரூ.285 கோடியில் சாலைகளை புனரமைத்து வருகிறோம். 2026 வரை நம்முடைய ஆட்சிதான் இருக்கிறது. அதனால் புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி மத்திய அரசைச் சேர்ந்தவராக இருந்தால், எளிதாக கூடுதல் நிதியை பெற்று வருவார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும். கவர்னரோடு அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களே தவிர, வேறு எந்த வேலையும் நடக்கவில்லை. இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞரை வேட்பாளராக நிறுத்தினேன். அவரை அனுபவம் இல்லாதவர் என்று சொன்னார்கள். அனுபவம் மிக்க வைத்திலிங்கம் நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார் ? எதாவது ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா ? நமது வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவருக்கு வாக்களியுங்கள்” என்றார்.