சிவகங்கை: காங்கிரஸ் மூத்த தலைவர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பனை சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் சந்தித்து ஆதரவு கேட்டார்.
சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் தரக் கூடாது என்று காங்கிரஸை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏகள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் உள்ளிட்ட கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பினர். அதேபோல், அவருக்கு சீட் தரக்கூடாது என திமுகவினரும் தலைமையிடம் வலியுறுத்தினர். மேலும் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி, முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் சீட் கேட்டு கட்சி தலைமையிடம் விருப்ப மனு அளித்தனர்.
எனினும், கார்த்தி சிதம்பரத்துக்கே கட்சித் தலைமை சீட் வழங்கியது. அதன் பின்னர் ப.சிதம்பரம், அதிருப்தியில் இருந்த திமுகவைச் சேர்ந்த சிவகங்கை நகராட்சித் தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவு திரட்டினார். ஆனால், காங்கிரஸை சேர்ந்த அதிருப்தியாளர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸில் அதிருப்தியில் உள்ளவர்களை வளைக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நேற்று இ.எம்.சுதர்சன நாச்சியப்பனை அவரது வீட்டில் பாஜக வேட்பாளர் தேவநாதன், மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, நகரத் தலைவர் உதயா உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு கேட்டனர். இது குறித்து இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தரப்பினரிடம் கேட்டபோது, காங்கிரஸில் இருந்து கொண்டு அவருக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று தேவநாதனுக்கு பதிலளித்ததாகத் தெரிவித்தனர். இதற்கிடையே காங்கிரஸ் அதிருப்தியாளர்களிடம் தங்களுக்கு ஆதரவு கேட்டு அதிமுகவினரும் அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.