சண்டிகரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் தன்மய் மோதிவாலா. இவர் தனது குடும்ப சொத்து பத்திரங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் கையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ் ஒன்று கிடைத்திருக்கிறது. அது என்னவென்று பார்த்தவருக்கு ஒரே ஆச்சர்யம்.

1994-ல் அவரது தாத்தா 500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியிருக்கிறார். அந்த பங்குகளை அவரது தாத்தா விற்கவே இல்லை. காலப்போக்கில் அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார். 1994-ல் அவரது தாத்தா செய்த ஒரு சிறிய முதலீடு, தற்போது கணிசமான தொகையாகப் பெருகியிருக்கிறது.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளவர், “என் தாத்தா பாட்டி 1994-ல் 500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கினார்கள். அவர்கள் அதை மறந்துவிட்டார்கள். அவர்கள் அதை ஏன் வாங்கினார்கள், அவர்கள் அதை வைத்திருந்தார்களா என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஓர் இடத்தில் குடும்பத்தின் சொத்துக்களை அடுக்கி வைக்கும்போது இதுபோன்ற சில சான்றிதழ்கள் எனக்குக் கிடைத்தன. (ஏற்கனவே இவற்றை டிமேட்டிற்கு மாற்றுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது)’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The power of holding equity
My Grand parents had purchased SBI shares worth 500 Rs in 1994.
They had forgotten about it. Infact they had no idea why they purchased it and if they even hold it.I found some such certificates while consolidating family’s holdings in a… pic.twitter.com/GdO7qAJXXL
— Dr. Tanmay Motiwala (@Least_ordinary) March 28, 2024
இந்த பதிவு பலரின் கவனத்தைப் பெறவே, இந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு என்ன எனக் கேட்டுள்ளனர். டிவிடெண்டை தவிர்த்து தற்போது பங்குகளின் மதிப்பு 3.75 லட்சமுள்ளதாகவும், இது மிகப்பெரிய தொகை இல்லையெனினும் 30 ஆண்டுகளில் 750 மடங்கு வருமானம் என்பது உண்மையில் பெரியது என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த சான்றிதழ்களை டிமேட்டாக மாற்றுவதற்குச் சிரமப்பட்டதைக் குறித்தும் இதற்காக ஓர் ஆலோசகரின் உதவியைப் பெற நேர்ந்தது என்றும் செயல்முறையின் வேதனையான விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.