மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு அரசியல் கட்சிகளிடையே இன்னும் முடிவாகாமல் இருக்கிறது. இதனால் வேட்பாளர்கள் பிரசாரத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா(உத்தவ்) தலைமையிலான மகாவிகாஷ் அகாடியில் காங்கிரஸ் கட்சி தென்மத்திய மும்பை, சாங்கிலி மற்றும் பிவாண்டி தொகுதியை கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தென்மத்திய மும்பை மற்றும் சாங்கிலி தொகுதிக்கு உத்தவ் தாக்கரே ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். இதே போன்று பிவாண்டி தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த சரத் பவார் அந்த தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்துவிட்டார். இதனால் சாங்கிலி மற்றும் பிவாண்டி தொகுதியில் நட்பு ரீதியில் போட்டியிடலாம் என்று காங்கிரஸ் கூறிக்கொண்டிருந்தது.

ஆனால் அதனை ஏற்க முடியாது என்று உத்தவ் தாக்கரே கூறிவிட்டார். இதனால் இப்பிரச்னை முடிவுக்கு வராமல் இருந்தது. மும்பையில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை உத்தவ் தாக்கரே ஒதுக்கி இருந்தார். அந்த தொகுதிக்கும் காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இப்பிரச்னையை மாநில காங்கிரஸ் தலைமை கட்சியின் தலைமைக்கு எடுத்துச்சென்றது. உடனே சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுடன் இணக்கமாக செல்லும்படி மாநில நிர்வாகிகளிடம் கட்சி தலைமை கேட்டுக்கொண்டது. இதையடுத்து இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோர் கொடுக்கும் தொகுதிகளை ஏற்பது என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
புதிய ஒப்பந்தப்படி சிவசேனா(உத்தவ்) 22 தொகுதியிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதியிலும், காங்கிரஸ் 16 தொகுதியிலும் போட்டியிட இருக்கிறது. இது குறித்து காங்கிரஸ் உட்பட மூன்று கட்சிகளின் தலைவர்களும் முறைப்படி அறிவிக்க இருக்கின்றனர். இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில்,”கட்சி தலைமை சொல்வதை எங்களால் தட்ட முடியவில்லை. நாங்கள் கொடுத்த பட்டியலை காங்கிரஸ் தலைமை ஏற்கவில்லை.

இந்தியா கூட்டணியில் உத்தவ் மற்றும் சரத் பவார் முக்கியம் என்று கூறிவிட்டனர். பிவாண்டி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு கிடையாது. இதே போன்று சாங்கிலி தொகுதியிலும் சிவசேனாவிற்கு செல்வாக்கு கிடையாது. எனவே அத்தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுப்பது குறித்து உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY