
'சென்னை ஸ்டோரி' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகல்?
பிலிப் ஜான் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க 'சென்னை ஸ்டோரி' என்ற சர்வதேசத் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமாகியது. அப்படத்தின் பூஜை, படப்பிடிப்பில் கலந்து கொண்டது பற்றி கடந்த வாரம் தான் அப்டேட் கொடுத்திருந்தார் ஸ்ருதிஹாசன்.
திமேரி என் முராரி எழுதிய 'தி அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற நாவலைத் தழுவி உருவாகும் படம் இது. சென்னை மாநகரப் பின்னணியில் காதல், காமெடி கலந்த படமாக ஆரம்பமானது.
“புதிய நாள், புதிய படம், புதிய எனர்ஜி” என இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு குறித்து மகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார் ஸ்ருதிஹாசன். படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. தற்போது அப்படத்திலிருந்து ஸ்ருதி விலகிவிட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது இனிமேல்தான் வெளிவரும் என்கிறார்கள்.
இப்படத்தில் முதலில் சமந்தா நடிப்பதாக இருந்தது. அவர் இப்படத்திலிருந்து விலகியதால்தான் ஸ்ருதிஹாசன் அவருக்குப் பதிலாக ஒப்பந்தமானார். தற்போது ஸ்ருதியும் விலகியிருப்பது என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.