நாடு முழுவதும் தேர்தல் பத்திர விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசியல் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றிருப்பதாக, பரபரப்பாகப் பேசப்படுகிறது. சமீபத்தில் இந்த தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து, உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்ஜார் என்ற கிராமத்தைச் சேர்ந்த சவகாரா மன்விர் என்பவரிடம், தேர்தல் பத்திரத்தைப் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது.
மன்விருக்கு சொந்தமான நிலத்தை திட்டப்பணிகளுக்காக அதானியின் கிளை நிறுவனமான வெல்ஸ்பன் நிறுவனம் விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தியது.
பட்டியலினத்தை சேர்ந்தவரான சவகாரா மன்விர் தனது குடும்ப சொத்தான விவசாய நிலத்தை 16.61 கோடிக்கு விற்பனை செய்ய சம்மதித்தார்.

இதற்காக முதல் தவணையாக 2.80 கோடியும், இரண்டாவது தவணையாக 13.81 கோடியும் மன்விரின் குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் பெயருக்கு வங்கிக்கணக்கில் போடப்பட்டது.
பணம் வங்கிக்கணக்கிற்கு வந்த பிறகு வெல்ஸ்பென் அதிகாரிகள் மகேந்திர சிங், வருவாய்த்துறை அதிகாரி விமல் ஜோஷி, பா.ஜ.க நகர தலைவர் ஹேமந்த் ஆகியோர் மன்விர் குடும்பத்திடம் பேசினர். இந்த அளவுக்கு வங்கிக்கணக்கில் பணம் இருந்தால் வருமான வரித்துறையால் பிரச்னை வரும் என்றும், எனவே தேர்தல் பத்திரத்தில் முதலீடு செய்தால் பணம் சில ஆண்டுகளில் 1.5 மடங்கு கூடுதலாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறினார்கள்.
தேர்தல் பத்திரம் (Electoral bond) என்பது அரசியல் கட்சிக்கு அல்லது தனிநபர்களுக்கு நன்கொடை செலுத்த விரும்பும் ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்தியாவில் இணைக்கப்பட்ட நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளிலிருந்து வாங்கக்கூடிய ஒரு உறுதிமொழி பத்திரம் (Promissory note) போன்றது. இது முதலீடு அல்ல… முதலீடு என்று சொல்லி ஏமாற்றியுள்ளார்கள்.
சரியாக படிப்பறிவு இல்லாத மற்றும் தேர்தல் பத்திரம் குறித்து அறிந்திராத மன்விர் குடும்பத்தினர், தேர்தல் பத்திர முதலீடு என்று அவர்கள் கூறியதை அப்படியே நம்பியுள்ளனர்.
வெல்ஸ்பன் நிறுவனத்துக்கு மன்விர் குடும்ப உறுப்பினர்களை நான்கு முறை அழைத்து தேர்தல் பத்திரத்தில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களது பேச்சை நம்பி மன்விர் குடும்பமும் 11.14 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினர். அந்த தேர்தல் பத்திரத்தில் 10 கோடி மதிப்பிலான பத்திரங்களை பா.ஜ.க பணமாக்கிவிட்டது. எஞ்சியவற்றை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பணமாக்கிக்கொண்டது. இப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை மன்விர் குடும்பத்தினர் அறிந்து கொண்டார்கள்.

இதையடுத்து மன்விர் குடும்பம் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளனர். ஆனால், அஞ்ஜார் நகர போலீஸார் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. புகாரில் வெல்ஸ்பன் நிறுவன இயக்குனர்கள் விஷ்வநாதன், சஞ்சய், சிந்தன், பிரவின், மகேந்திர சிங், விமல் ஜோஷி மற்றும் ஹேமந்த் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏன் இன்னும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்று அஞ்ஜார் போலீஸ் நிலைய அதிகாரி சைலேந்திராவிடம் கேட்டதற்கு, ”புகாரை பெற்று அது குறித்து விசாரித்து வருகிறோம். புகாராக பதிவு செய்ய தகுதியானதா என்பதை விசாரித்து முடிவு செய்த பிறகு வழக்குப் பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.