தருமபுரி: மத்தியில் மீண்டும் மோடி அரசு அமைவது 101 சதவீதம் உறுதி என தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நடந்த தேர்தல் வாகன பிரச்சாரத்தின்போது தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து தருமபுரி மாவட்டம் தொப்பூரில் இன்று (ஏப்.12) வாகன பிரச்சாரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்பது 101 சதவீதம் உறுதி. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய நல்ல திட்டங்கள் மீண்டும் தொடர மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
திமுக பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, மகளிருக்கு ஏராளமான பொய் வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது. ரூ.1,000 மகளிருக்கு தருவதாகக் சொன்னார்கள். ஆனால், இந்த தொகை சிலருக்கு மட்டுமே வந்துள்ளது, பலருக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை. ஒருபுறம் உரிமைத் தொகை என்ற பெயரில் பணம் வழங்கும் இந்த அரசு மறுபுறம் மதுக்கடைகளை திறந்து அந்த பணத்தை பறித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழக அரசு அனைத்திலும் நம்பர் 1 அரசு என விளம்பரப் படுத்திக் கொள்கிறது. ஆம், இந்த அரசு போதை பொருட்கள் புழக்கத்திலும், கஞ்சா விற்பனையிலும் நம்பர் 1 அரசாகத் திகழ்கிறது. எனவே, திமுக-வுக்கு வாக்களிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும். அதேபோல, அதிமுகவுக்கு வாக்களிப்பதும் வாக்கை வீணடிப்பதற்கு சமம்.
ஆகவே, இம்மாவட்டத்தை சாதி, மதம் கடந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பல்வேறு செயல்திட்டங்களை கொண்டுள்ள பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவர் வெற்றிபெற்றால் காவிரி உபரி நீர் திட்டம், தக்காளியை இருப்பு வைக்க குளிர்பதன கிடங்கு, மாம்பழக் கூழ் தொழிற்சாலை ஆகியவற்றை ஏற்படுத்துவார்” இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.
பிரச்சாரம் முடிந்த பின்னர் அப்பகுதியில் இருந்த கடை ஒன்றில் கட்சியினருடன் மற்றும் வேட்பாளருடன் சென்று ஜி.கே.வாசன் தேநீர் அருந்தினார். இந்தக் கூட்டத்தில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.