பாலஸ்தீனம் மீது கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர்தொடுத்து வரும் இஸ்ரேல், போர்நிறுத்தம் வேண்டுமென்று தொடர்ச்சியாகக் கூறிவரும் நாடுகளில் ஒன்றான இரான் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது. அந்த வரிசையில், ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவிலிருக்கும் இரான் தூதரகம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இரான் ராணுவத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் தான் எனக் குற்றம்சாட்டிய இரான், பதிலடி தருவோம் என பகிரங்கமாக அறிவித்தது. இதற்கு எதிர்வினையாற்றிய இஸ்ரேல், இரான் அவ்வாறு தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது. இதனால், இரு நாடுகளுக்குமிடையே பதட்டமான சூழல் உருவாகியிருக்கிறது. மேலும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், அடுத்த 48 மணிநேரத்தில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும், அதனை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகிவருவதாகவும், இரானிய தலைமையால் விளக்கப்பட்ட ஒரு நபரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்த நிலையில், இரான், இஸ்ரேலுக்கு இந்தியர்கள் தற்போது செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து, மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேல், இரான் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் இரான் அல்லது இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Travel advisory for Iran and Israel:https://t.co/OuHPVQfyVp pic.twitter.com/eDMRM771dC
— Randhir Jaiswal (@MEAIndia) April 12, 2024
தற்போது இரான் அல்லது இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் அங்குள்ள இந்தியத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தங்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறும், தங்களின் இயக்கங்களை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.