புதுடெல்லி: “நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் இப்போது காத்திடாவிடில் சுதந்திரத்துக்கு முன் இருந்த நிலைக்கு நாடு சென்றுவிடும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எச்சரித்துள்ளார்.
இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள 55 பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்புகள் மற்றும் சமூக நீதி அமைப்புகளின் பிரதிநிதிகளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த தேர்தல் வெறும் காங்கிரஸ் கட்சிக்கான போராட்டம் அல்ல. காங்கிரஸுக்காக யாரும் போராட வேண்டியதில்லை. 139 ஆண்டுகளைக் கடந்து காங்கிரஸ் உயிரோடு உள்ளது.
காங்கிரஸ் கட்சியை இல்லாமல் செய்துவிட பல முயற்சிகள் நடந்தன. இருந்தும் அது நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் இல்லாமல் செய்துவிட முடியாது. அது சாகாது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நாட்டின் அரசியல் சாசனத்தைக் காக்க ஒன்றிரண்டு கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்கவே நாங்கள் பாடுபடுகிறோம்.
ஜனநாயகமும், அரசியல் சாசனமும் காப்பாற்றப்பட்டால்தான் மக்கள் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இல்லையெனில், சுதந்திரத்துக்கு முன் இருந்ததைப் போல், பேச முடியாதவர்களாகவும், கேட்க முடியாதவர்களாகவும் மக்கள் ஆகிவிடுவார்கள்” என்று கார்கே கூறினார்.
இதனிடையே, “எவ்வளவு காலம்தான் காங்கிரஸை குற்றம்சாட்டுவீர்கள்? கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. பாஜக தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தது?
‘75 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை’ என்கிறார்கள். எதுவும் நடக்கவில்லை என்றால், உத்தராகண்ட் எப்படி இவ்வளவு திறமையுடன் வளர்ந்திருக்கிறது? ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் எங்கிருந்து வந்தது? இதற்கு யார் காரணம்? 1950-களில் பண்டிட் ஜவஹர்லால் நேரு முன்முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் சந்திரயான் வெற்றிக்கான விதைகள் சாத்தியமா?” என்று உத்தராகண்ட் பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கேள்விகளை அடுக்கினார். அதன் விவரம்: “எவ்வளவு காலம்தான் காங்கிரஸை குற்றம்சாட்டுவீர்கள்?”- பிரியங்கா காந்தி